காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அண்மையில், அணை கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜையை நடத்த கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, தமிழக எல்லையோர விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேகதாது அணை திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழக முதலமைச்சர் சி.ஜே.விஜய், காவிரி நதிநீர் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், மூத்த வழக்கறிஞர்களுடன் விரிவாக விவாதித்து மேகதாது அணை திட்டத்திற்கு எதிராகத் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (NGT) அவசர வழக்குத் தொடர இறுதி ஒப்புதல் அளித்தார். அதன்படி, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் தமிழக அரசு சார்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு உள்ள அனைத்து சட்டப்பூர்வ மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த வாய்ப்புகளையும் பயன்படுத்தி அணை திட்டத்தைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் களம் இறங்கியுள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், மேகதாது அணை திட்டத்தால் சுமார் 5,200 ஹெக்டேருக்கும் அதிகமான காப்புக்காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க மண்டலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு, அப்பகுதியில் வாழும் அரிய வகை வனவிலங்குகள், பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உரிய அனுமதியின்றி கர்நாடக அரசு பூமி பூஜை நடத்தவோ அல்லது எந்தவொரு ஆரம்பகட்ட கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளவோ கூடாது எனத் தடை விதிக்கக் கோரப்பட்டுள்ளது.
அண்மையில் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தமிழக அரசு தற்போது சுற்றுச்சூழல் பாதிப்புகளை முதன்மைப்படுத்தி பசுமைத் தீர்ப்பாயத்தை நாடியுள்ளது. மேலும், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், கீழ்மடை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் இந்த அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள் காவிரி நதிநீர் அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.