Posted in

ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான எஸ்ஐ கிருஷ்ணகுமாரிக்கு நீதிமன்றக் காவல்!

நெல்லை பாளையங்கோட்டையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மென்பொருள் பொறியாளர் கவின் செல்வாகணேஷ் சாதிய வன்மத்தால் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் நீண்ட தேடுதலுக்குப் பிறகு சிபிசிஐடி (CB-CID) போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளியின் தாயாரும், ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளருமான (SI) கிருஷ்ணகுமாரிக்கு வரும் ஜூன் 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் (Judicial Custody) விதித்து நெல்லை எஸ்சி/எஸ்டி (SC/ST) சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினியைக் காதலித்த காரணத்திற்காக, கடந்த ஆண்டு ஜூலை 27 அன்று சுபாஷினியின் தம்பி சுர்ஜித்தால் கேடிசி நகர் பகுதியில் வஞ்சகமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கவின் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெண்ணின் வீட்டார் தங்களின் சாதிப் பெருமைக்காக இந்த ஆணவக் கொலையை நிகழ்த்தினர். இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளி சுர்ஜித், அவரது தந்தை எஸ்ஐ சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொடூரமான இந்த ஆணவக் கொலைச் சதியில் முக்கியப் பங்கு வகித்த கிருஷ்ணகுமாரியை, காவல் துறையில் சிபாரிசுகளைப் பயன்படுத்திப் போலீசார் கைது செய்யாமல் பாதுகாப்பதாகக் கவினின் பெற்றோர் மற்றும் விசிக உள்ளிட்ட சமூக அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹேமா, சிபிசிஐடி போலீசாருக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்து கிருஷ்ணகுமாரியை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் சிபிசிஐடி போலீசார் நேற்று அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணகுமாரிக்கு ஜூன் 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி, அவரைக் கொக்கிளகுளம் மகளிர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தமிழக காவல் துறையிலேயே சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணிபுரிந்து கொண்டு, சாதி வெறியால் தங்களின் மகனை ஏவி ஒரு ஐடி ஊழியரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்த வழக்கில் தற்போது தந்தை, மகன் மற்றும் தாயார் என ஒட்டுமொத்தக் குடும்பமும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.