Posted in

மர்மமாகும் டிரம்ப்பின் உடல்நிலை: மருத்துவ அறிக்கையை ரகசியமாக வைத்திருக்கும் வெள்ளை மாளிகை பின்னணி!

79 வயதான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் (Walter Reed) தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் தனது வழக்கமான 6 மாத மருத்துவப் பரிசோதனையை அண்மையில் முடித்துள்ளார். பரிசோதனை முடிந்தவுடன் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தள பக்கத்தில், “அனைத்து சோதனைகளும் மிகச் சரியாக (PERFECTLY) முடிந்துள்ளன” என்று டிரம்ப் பதிவிட்டிருந்தார். ஆனால், முந்தைய வழக்கங்களுக்கு மாறாக, டிரம்ப்பின் தற்போதைய அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை அல்லது அதன் சுருக்கத்தை வெளியிட வெள்ளை மாளிகை தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது அமெரிக்க அரசியலில் புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பொதுவாக அமெரிக்க அதிபர்களின் மருத்துவப் பரிசோதனை முடிவடைந்த சில மணி நேரங்களிலோ அல்லது ஓரிரு நாட்களிலோ அவர்களின் உடல்நிலை குறித்த மருத்துவரின் அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படுவது வழக்கமான ஒன்றாகும். கடந்த ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் டிரம்ப் பரிசோதனை செய்தபோது, அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் சீன் பார்பபெல்லா (Dr. Sean Barbabella) அன்றே டிரம்ப் ‘சிறந்த ஆரோக்கியத்துடன்’ இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். ஆனால், இம்முறை பரிசோதனை முடிந்து மூன்று நாட்களுக்கு மேலாகியும் வெள்ளை மாளிகை மௌனம் காப்பது, அதிபரின் உடல்நிலையில் ஏதேனும் பெரிய பாதிப்புகள் மறைக்கப்படுகிறதா என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்களிடையே தீவிரமாக்கியுள்ளது.

சமீபகாலமாக டிரம்ப் பொதுவெளியில் தோன்றும் போது அவரது கைகளில் உள்ள பெரிய தழும்புகள் மற்றும் ரத்தக் கட்டுகளை (bruising) மறைக்க தடிமனான மேக்கப் அணிவது, மற்றும் சில முக்கிய அரசு கூட்டங்களின் போது அவர் நீண்ட நேரம் கண்களை மூடி உறங்குவது போன்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி விவாதங்களைக் கிளப்பின. இதற்கு டிரம்ப் தரப்பில், தான் தினமும் ஆஸ்பிரின் மாத்திரைகளை உட்கொள்வதால் ரத்தம் நீர்த்துப்போய் கைகளில் தழும்பு ஏற்படுவதாகவும், கூட்டங்களில் தான் தூங்கவில்லை, சற்றே ஓய்வெடுத்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டது. எனினும், அவரது கால்களில் ஏற்பட்டுள்ள வீக்கம் காரணமாக ‘க்ரோனிக் வெனஸ் இன்ஸஃபிசியன்சி’ (Chronic venous insufficiency) எனப்படும் நரம்பு பாதிப்பு அவருக்கு இருப்பதாக கடந்த ஆண்டு மருத்துவக் குழு ஒப்புக்கொண்டிருந்தது.

வெள்ளை மாளிகையின் இந்த ரகசியப் போக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியர் டாக்டர் ஜொனாதன் ரெய்னர், “அதிபரின் உடல்நிலை குறித்த அடிப்படைத் தகவலைக் கூட வெளியிட வெள்ளை மாளிகை மறுப்பது கற்பனை செய்ய முடியாதது; இது மக்கள் மத்தியில் கடுமையான நம்பகத்தன்மை இன்மையை உருவாக்கும்” என்று எச்சரித்துள்ளார். அடுத்த மாதம் டிரம்ப் தனது 80-வது வயதில் கால்வைக்க உள்ள நிலையில், அமெரிக்க வரலாற்றிலேயே மிக வயதான அதிபராகப் பதவியில் இருக்கும் டிரம்ப்பின் நினைவாற்றல் மற்றும் இதய ஆரோக்கியம் குறித்த உண்மைத் தகவல்களை வெள்ளை மாளிகை மறைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.