Posted in

கோவை சிறுமி கொலைக் கைதி கார்த்தியை வெளுத்து வாங்கிய சக கைதிகள் 5 பேர் மீது வழக்கு!

கோவை சூலூர் அருகே 10 வயது பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் கைதாகிக் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளி கே. கார்த்தி (33) மீது சக கைதிகள் திடீரென பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மதிய உணவு இடைவேளையின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த சக கைதிகள் சிறையில் சாப்பிடப் பயன்படுத்தப்படும் அலுமினியத் தட்டுகளை மடக்கி, அதைக் கொண்டு கார்த்தியைச் சுக்குநூறாக வெட்டிச் சிதைத்துள்ளனர். இச்சம்பவம் சிறை வளாகத்திற்குள் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியைக் கொன்ற மிருகத்தனமான செயலுக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. சக கைதிகள் ஒன்று திரண்டு தட்டுகளாலும், கரண்டிகளாலும் கார்த்தியை சரமாரியாகத் தாக்கியதில் அவனுக்கு நெற்றி, தலை மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயம் அடைந்த கார்த்தியால் தனது கண்களைக் கூடத் திறக்க முடியாத அளவுக்கு முகம் வீங்கியுள்ளது. அவனது உடலில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்ததை அடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் தலையிட்டு அவனைக் காப்பற்றிப் பலத்த பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவனது நெற்றியில் ஐந்து தையல்கள் போடப்பட்டுள்ளன.

இந்தத் துணிகரத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சிறைக்குள் வன்முறையில் ஈடுபட்ட சக கைதிகள் 5 பேர் மீது சிறைத்துறை நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து நான்கு பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சிறைக்குள் மீண்டும் மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், தாக்குதல் நடத்திய கைதிகளில் மூன்று பேரை உடனடியாகத் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உள்ள வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றிச் சிறைத்துறை டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த மே 22 அன்று போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது, கட்டிடத்தில் இருந்து குதித்துக் கால் மற்றும் கைகளில் முறிவு ஏற்பட்டுச் சிகிச்சையில் இருந்த கார்த்திக்கு, தற்போது சிறைக்குள் விழுந்த இந்த ‘தர்ம அடி’ மேலும் பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய கோவை சிறுமி கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளி, சிறைக் காவலில் இருக்கும்போதே சக கைதிகளால் தட்டுகளைக் கொண்டு வெட்டித் தாக்குதலுக்குள்ளான விவகாரம், சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் கைதிகளின் மனநிலை குறித்துப் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.