Posted in

 தவெக கூட்டணியில் எம்.பி.யாகிறார் பிரவீன் சக்ரவர்த்தி? கோட்டை வட்டாரத்தில் பரவும் பரபரப்புத் தகவல்!

தமிழகத்தில் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், நாடாளுமன்ற மாநிலங்களவை (Rajya Sabha) இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக எம்பி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் ஜூன் மாத மத்தியில் காலியாகவுள்ள அந்த ஒரு இடத்தைக் கைப்பற்ற தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தீவிரமாக முயன்று வருகிறது. இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) தொழில்நுட்பம் மற்றும் தரவுப் பிரிவின் தலைவரான பிரவீன் சக்ரவர்த்தி தவெக ஆதரவோடு எம்பியாகப் டெல்லிக்குச் செல்ல அதிக வாய்ப்புள்ளதாகத் டெல்லி மற்றும் கோட்டை வட்டாரங்களில் இருந்து அதிரடித் தகவல்கள் கசிந்துள்ளன.

சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், ஆட்சி அமைக்கச் சில இடங்கள் தேவைப்பட்ட சூழலில் காங்கிரஸ் தங்களின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை வழங்கி முதல்வர் விஜய்க்குத் தோள் கொடுத்தது. அதன் பலனாக அண்மையில் காங்கிரஸின் இரு மூத்த எம்.எல்.ஏ-க்கள் விஜய் அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்தத் தொடர் அரசியல் நெருக்கத்தின் அடுத்த கட்டமாக, தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்படும் நாடாளுமன்ற மேலவை எம்பி சீட்டைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் தவெகவிடம் அதிகாரப்பூர்வமாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.

இந்த எம்பி பதவிக்கான காங்கிரஸ் உத்தேசப் பட்டியலில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகையின் பெயரும் அடிபட்டாலும், ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவரான பிரவீன் சக்ரவர்த்தியின் பெயரே முதலிடத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடக்கம் முதலே திமுக கூட்டணியை விமர்சித்து, தவெக மற்றும் காங்கிரஸ் இடையே புதிய கூட்டணி மலர வேண்டும் என்று ரகசிய லாபி செய்தவர்களில் பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாகூர் எம்பி ஆகியோர் மிக முக்கியமானவர்கள் ஆவர். எனவே, தவெகவிற்கு ஆரம்பக்கால அரசியல் அடித்தளம் அமைத்துக் கொடுத்ததற்குப் பரிசாகப் பிரவீன் சக்ரவர்த்திக்கு இந்த ராஜ்யசபா சீட் கிடைக்கப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் தவெக முதன்முதலாகத் தங்களது கணக்கைத் தொடங்க இந்த இடைத்தேர்தல் ஒரு வரலாற்று வாய்ப்பாக இருக்கும் என்பதால், தவெகவின் மூத்த நிர்வாகிகள் தங்களின் சொந்தக் கட்சி வேட்பாளரையே நிறுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். டெல்லி சென்றிருந்த போது பிரதமர் மோடியைச் சந்தித்த விஜய், ராகுல் காந்தியைச் சந்திக்காமல் சென்னை திரும்பிய நிலையில், காங்கிரஸ் எழுப்பியுள்ள இந்த ராஜ்யசபா எம்பி கோரிக்கைக்குத் தவெக தலைமை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதே தற்போதைய தமிழக அரசியலின் மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.