ஆஸ்திரியா மற்றும் இத்தாலியின் எல்லைப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் (Alps) பனிமலையில், கடந்த 1991 ஆம் ஆண்டு 5,300 ஆண்டுகள் பழமையான மனித மம்மி (Mummy) உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. “ஓட்சி தி ஐஸ்மேன்” (Ötzi the Iceman) என்று அழைக்கப்படும் இந்த மம்மியின் உடல், பனிக்கட்டிகளுக்குள் பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்து கிடந்ததால் சிதையாமல் அப்படியே பாதுகாப்பாக இருந்தது. இந்நிலையில், இத்தாலியில் உள்ள மம்மிகளுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Eurac Research) சேர்ந்த மைக்ரோபயாலஜி விஞ்ஞானிகள், இந்த மம்மியின் குடல் மற்றும் தோலில் இருந்து நான்கு வகையான விசித்திரமான ‘ஈஸ்ட்’ (Yeast – நொதி) கிருமிகளை அண்மையில் கண்டெடுத்துள்ளனர்.
பனிப்பிரதேசக் கடுமையான குளிரிலும் அழியாமல் வாழும் திறன் கொண்ட இந்த வரலாற்றுக்கு முந்தைய ஈஸ்ட் கிருமிகளை ஆய்வகத்தில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விஞ்ஞானிகள் வெற்றிகரமாகப் பெருக்கினர். “உங்களிடம் ஈஸ்ட் இருக்கிறது என்று யாரிடம் கூறினாலும், அவர்கள் உடனடியாக ‘இதை வைத்து ரொட்டி செய்யலாமா?’ என்றுதான் கேட்பார்கள்” என இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் முகமது சர்கான் (Mohamed Sarhan) வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பழங்கால ஈஸ்ட்டை பயன்படுத்தி பாரம்பரிய புளிப்பு மாவு ரொட்டியை (Sourdough bread) சுட விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் இறங்கினர்.
ஆரம்பத்தில் இந்த ஈஸ்ட் மாவுச் சூழலுக்குப் பழகாததால் ரொட்டி தயாரிக்கும் முயற்சி தோல்வியடைந்தது. இருப்பினும், சுமார் மூன்று மாத காலத் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, 24 மணி நேரத்திற்குள் சாதாரணமாக உப்பக்கூடிய மாவை உருவாக்கி, அதில் இருந்து “மிகவும் சுவையான” புளிப்பு மாவு ரொட்டியை விஞ்ஞானிகள் சுட்டு அசத்தியுள்ளனர். மேலும், இந்த அதிசயப் பழங்கால ஈஸ்ட் கிருமிகளைக் கொண்டு, ஜெர்மனியின் பிரபல மது உற்பத்தி நிபுணர்களின் உதவியுடன் அடுத்து ஒரு விசித்திரமான வரலாற்றுக்கு முந்தைய ‘பீர்’ (Beer) மதுபானத்தைத் தயாரிக்கவும் விஞ்ஞானிகள் திட்டமிட்டு, அதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஈஸ்ட் கிருமிகள் ஓட்சியின் மரணத்திற்குப் பிறகு அவரது உடலில் தொற்றியிருக்கலாம் என்று மரபணு சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மம்மியைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ‘பினாயில்’ (Phenol) என்ற வேதிப்பொருளை இந்த ஈஸ்ட் கிருமிகள் உணவாக உட்கொண்டு வளர்ந்துள்ளதை விஞ்ஞானிகள் ஆச்சரியத்துடன் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம், எதிர்காலத்தில் வேதிப்பொருள்களால் மாசடைந்த சுற்றுச்சூழல் பகுதிகளைச் சுத்தம் செய்ய இந்த ஈஸ்ட்களை பயன்படுத்த முடியும் என்ற புதிய மருத்துவ மற்றும் அறிவியல் வாசல்களும் திறந்துள்ளதாகப் புகழ்பெற்ற ‘மைக்ரோபயோம்’ (Microbiome) அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.