Posted in

அம்மா மறைந்தபின் திக்கறியாமல் தவித்தோம் -இனி விஜய் கண் அசைவில் செயல்படுவோம்! – அதிமு முன்னாள் அமைச்சர்கள் உருக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து முன்னணி நிர்வாகிகள் ஆளும் தவெகவிற்கு மாறுவது தீவிரமடைந்துள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 6, 2026) நடைபெற்ற பிரம்மாண்ட இணைப்பு விழாவில், அதிமுகவின் 4 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் தங்களை அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். தவெக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் இந்த மாபெரும் அரசியல் நகர்வு அரங்கேறியுள்ளது.

தவெகவில் இணைந்த பின் மேடையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது அதிமுக கட்டுக்கோப்பாக இருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக நாங்கள் கட்சியில் திக்கறியாமல், நிம்மதியின்றித் தவித்து வந்தோம். தற்போது முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் இணைந்துள்ளதால் எங்களுக்கு முழு மனநிம்மதி கிடைத்துள்ளது. அன்று ஜெயலலிதா அம்மாவுக்கு எந்த அளவிற்கு நாங்கள் உண்மையாக உழைத்தோமோ, அதே விசுவாசத்துடன் இனி முதலமைச்சர் விஜய்க்காகவும் உழைப்போம்” என்று உருக்கமாகப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மற்றொரு முன்னாள் அமைச்சரான எம்.சி. சம்பத், “நாங்கள் இனி தவெகவை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்; முதலமைச்சர் விஜய் அவர்களின் கண் அசைவுக்கு ஏற்ப நாங்களெல்லாம் களத்தில் செயல்படுவோம்” என்று உறுதி அளித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் சிவபதி பேசுகையில், “நாங்கள் எவ்விதப் பதவி ஆசையிலும் இங்கு வரவில்லை; எங்களுக்கு தவெகவில் உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்தால் போதும். அதிக இளைஞர்களைக் கொண்ட ஒரு புதிய ஆற்றல்மிக்க கட்சியில் எங்களை இணைத்துக் கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்று அதிமுக தலைமையின் மீதான தங்களது அதிருப்தியைப் பொதுமேடையில் உடைத்துப் பேசினர்.

அதிமுகவின் இந்த உள்கட்சி சரிவு குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் ஆட்சி அமைக்க அன்றைய ‘விஜய் மக்கள் இயக்கம்’ தான் மிக முக்கிய உறுதுணையாக இருந்தது என்ற வரலாற்று உண்மையைச் சுட்டிக்காட்டினார். அண்மைக்காலமாக அதிமுகவின் தற்போதைய எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அசுர வேகத்தில் தவெகவில் இணைந்து வருவது, தமிழக அரசியல் களத்தில் அதிமுகவிற்குப் பலத்த பின்னடைவாகவும், ஆளும் தவெகவிற்கு மிகப்பெரிய பலமாகவும் பார்க்கப்படுகிறது.