Posted in

வசமாக மாட்டிக்கொண்ட மேயர் ஆர்.பிரியா உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள்! ஆர்.டி.ஐ சட்டத்தில் வெளியான தகவல்.

சென்னை மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளாகப் பொறுப்பேற்றுள்ள மேயர், துணை மேயர் உள்ளிட்ட 75 சதவீதத்திற்கும் அதிகமான கவுன்சிலர்கள், சட்டப்படி தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்ற அதிர்ச்சிகரமான உண்மை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பதவியேற்று நீண்ட காலமாகியும் மக்கள் பிரதிநிதிகள் காட்டியுள்ள இந்த அலட்சியப் போக்கு, அரசியல் வட்டாரத்திலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஒட்டுமொத்தமாக உள்ள 200 கவுன்சிலர்களில் வெறும் 43 பேர் மட்டுமே சட்ட விதிகளின்படி பதவியேற்ற 90 நாட்களுக்குள் தங்களது சொத்து விவரங்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள 157-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் இந்த விபரங்களை இன்னும் தாக்கல் செய்யவில்லை. இதில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகிய முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களும் அடங்குவர் என்பதுதான் தற்போதைய பரபரப்புக்குக் காரணமாகும்.

கடந்த 1973ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (CCMC) விதிகளின்படியும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சட்டத்தின்படியும், மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்களது குடும்பத்தினரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், குத்தகை நிலங்கள், அடமானங்கள் மற்றும் கடன் விபரங்களை உரியக் காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை தங்களின் சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் மாநகராட்சி ஆணையரிடம் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதியும் நடைமுறையில் உள்ளது.

தற்போதைய சென்னை மாநகராட்சி மன்றத்தின் பதவிக்காலம் இன்னும் வெறும் 8 மாதங்களில் முடிவடைய உள்ள நிலையிலும், மேயர் உள்ளிட்ட பெரும்பான்மையான கவுன்சிலர்கள் தங்களது அதிகாரப்பூர்வ சொத்து விபரங்களை இன்னும் சமர்ப்பிக்காமல் மறைத்து வைத்திருப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விதிகளை முறையாகக் கண்காணிக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகத்தின் பலவீனத்தை இந்த ஆர்.டி.ஐ அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளதாகக் கூறி, உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.