பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் 18 வயது பல்கலைக்கழக மாணவனான ஹென்றி நோவாக் (Henry Nowak) என்பவர் விக்ரம் திக்வா (Vickrum Digwa) என்ற 23 வயது இளைஞனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி மகனின் வேண்டுகோளுக்கு இணங்கி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை மறைத்த அவரது தாய் கிரண் கவுர் (Kiran Kaur, 53) தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரத்தக் கறையுடன் தன் முன்னால் வந்து நின்ற மகன், கொலைக் கருவியை மறைக்குமாறு கேட்டபோது, “எந்தவொரு தாயும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தைத்தான் அவரும் செய்தார்” என்று அவரது குடும்பத்தினர் தற்போது நீதிமன்றத்திற்கு வெளியேயும் ஊடகங்களிலும் தற்காத்து பேசி வருகின்றனர். ஒரு நொடிப்பொழுதில் எடுக்கப்பட்ட அந்த தவறான முடிவு, அந்தத் தாயின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி, இன்று அவரை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சவுதாம்ப்டனின் பெல்மாண்ட் சாலையில் இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அரங்கேறியது. கால்பந்து விளையாடிவிட்டுத் திரும்பிய மாணவன் ஹென்றி நோவாக்கை, விக்ரம் திக்வா தனது சீக்கிய மத வழிபாட்டு பாரம்பரிய கத்தியான ‘கிர்பான்’ (Kirpan – 21 செமீ நீளமுடைய கத்தி) கொண்டு நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஐந்து முறை மிகக் கொடூரமாகக் குத்திக் கிழித்தார். இதில் ஹென்றியின் நுரையீரல் மற்றும் தோள்பட்டைக்கு பின்புறமுள்ள முக்கிய இரத்த நாளங்கள் கடுமையாகச் சேதமடைந்து, மார்புக் கூட்டுக்குள் அதிகளவில் இரத்தம் கசிந்து அவர் உயிருக்குப் போராடினார். இத்தனை கொடூரத்தை அரங்கேற்றிவிட்டு, கொலையாளி விக்ரம் திக்வா தனது மொபைல் போனை எடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஹென்றியை வீடியோ எடுத்ததோடு, தனது பெற்றோரையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்தார்.
சம்பவ இடத்திற்கு இரத்தக் கறையுடன் ஓடிவந்த தாய் கிரண் கவுரிடம், கொலைக்கு பயன்படுத்திய கூர்மையான கத்தியைக் கொடுத்து, அதனைத் காவல்துறையினரிடம் சிக்காமல் உடனடியாக மறைத்துவிடுமாறு விக்ரம் திக்வா கேட்டுக்கொண்டார். பதறிப்போன அந்தத் தாய், தன் மகன் செய்த கொடூரக் கொலையை விட அவனது எதிர்காலமே முக்கியம் என எண்ணி, அந்த ஆயுதத்தை வாங்கிச் சென்று தனது வீட்டில் ரகசியமாக மறைத்து வைத்தார். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு காவல்துறை வந்தபோது, தான் ஒரு இனவெறித் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், ஹென்றிதான் தன்னைத் தாக்கினார் என்றும் விக்ரம் திக்வா மிக சாமர்த்தியமாகப் பொய் வழக்கைக் ஜோடித்தார். காவல்துறையினரும் விக்ரமின் பொய் வார்த்தைகளை நம்பி, உயிருக்குப் போராடியபடியே “என்னால் சுவாசிக்க முடியவில்லை, என்னை கத்தியால் குத்திவிட்டார்கள்” என்று கதறிய ஹென்றிக்கு முதலுதவி செய்யாமல், அவரைக் குற்றவாளி போலக் கைகளில் விலங்கிட்டுக் கொடூரமாக நடத்தினர். இதன் காரணமாக ஹென்றி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார்.
தற்போது இந்த வழக்கில் அனைத்து உண்மைகளும் நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கொலையாளி விக்ரம் திக்வாவுக்கு நீதிமன்றம் அண்மையில் ஆயுள் தண்டனை விதித்ததோடு, குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்றும் அதிரடித் தீர்ப்பளித்தது. அதேசமயம், கொலையாளிக்குத் துணையாக இருந்து, கொலைக் கருவியான கத்தியை மறைத்து ஆதாரங்களை அழிக்க முயன்ற குற்றத்திற்காக அவரது தாய் கிரண் கவுரும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கான தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. “பெற்ற பாசத்தால் ஒரு கொலையாளியைக் காப்பாற்ற முயன்ற தாயின் செயல் நியாயமானதுதான்” என்று அவரது 75 வயது பாட்டி பிம்லா கவுர் வாதிட்டாலும், சட்டத்தின் பார்வையில் குற்றவாளிக்கு உதவிய அந்தத் தாயின் ஒரு நொடித் துணிச்சல், இன்று அவரது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும், எதிர்காலத்தையும் நடுத்தெருவில் நிறுத்தி, பிரிட்டன் முழுவதும் பெரும் இனப் பதற்றத்தையும், போராட்டங்களையும் வெடிக்கச் செய்துள்ளது.