Posted in

இந்தியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் வீரர்: இந்தியாவில் வெடித்த கோரிக்கை!

காசா முனையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மிக கொடூரமான ராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டுவிட்டு, தங்களது மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக இஸ்ரேலியப் படைவீரர்கள் இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலா வருவது வழக்கமாக உள்ளது. இந்தச் சுற்றுலாப் பாதை சர்வதேச அளவில் ‘ஹம்முஸ் ட்ரெயில்’ (Hummus Trail) என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சூழலில், காசாவில் அப்பாவி மக்களின் வீடுகளைத் தகர்த்துப் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஈத்தன் கில்போவா (Eitan Gilboa) என்ற இஸ்ரேலிய ரிசர்வ் படைவீரர், தற்போது இந்தியாவில் சுற்றுலாப் பயணியாக வலம் வருவது பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘ஹிந்த் ரஜப் அறக்கட்டளை’ (Hind Rajab Foundation – HRF) என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு, இந்தியக் காவல் துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் குடியுரிமைப் பணியகம் ஆகியவற்றிடம் அவசரப் புகார் ஒன்றை அளித்துள்ளது. தற்போது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பழைய மணாலி (Old Manali) மற்றும் கோண்ட்லா ஆகிய கிராமங்களில் உல்லாசமாக விடுமுறையைக் கழித்து வரும் ஈத்தன் கில்போவாவை, சர்வதேச போர்க்குற்ற விதிகளின் கீழ் இந்தியப் பாதுகாப்புப் படையினர் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பு தங்களது புகாரில் அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் ‘271வது காம்பாட் இன்ஜினியரிங் பட்டாலியனில்’ பணியாற்றிய ஈத்தன் கில்போவா, காசாவின் கான் யூனிஸ் மற்றும் ரஃபா ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புக் கட்டடங்களைப் வெடிவைத்துத் தகர்த்ததில் நேரடித் தொடர்புடையவர் என்று மனித உரிமை அமைப்பு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. தான் செய்த அந்த அழிவுகளை ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகக் கொண்டாடி, அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் பாலஸ்தீனக் குழந்தைகளின் விளையாட்டு மைதானங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு இடையே நின்று அவர் எடுத்த புகைப்படங்கள், 1960ஆம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கைச் சட்டத்தின்படி கடுமையான போர்க்குற்றத்தின் கீழ் வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்திய மண்ணானது போர்க்குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிந்து தப்பிப்பதற்கான புகலிடமாக மாறிவிடக் கூடாது என்றும், ஜெனீவா உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள இந்தியாவுக்கு இத்தகைய சர்வதேசக் குற்றவாளிகளைக் கைது செய்து விசாரிக்கும் சட்டப்பூர்வக் கடமை உள்ளது என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கில்போவாவை உடனடியாகக் கைது செய்யாவிட்டால், சர்வதேச அளவில் குற்றங்களுக்குத் துணைபோகும் நாடாக இந்தியா பார்க்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள போதிலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசு தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கப்படவில்லை.