Posted in

விஜய்யுடன் இணைய மறுத்த லாரன்ஸ்! TVK -க்கு எதிராக மாற்று கட்சியில் போட்டியிட முடிவு

தமிழக அரசியல் களத்தில் அண்மையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் மிக முக்கியமான விவாதமாக உருவெடுத்துள்ளது நடிகர் ராகவா லாரன்ஸின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்திதான். பாஜக மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ (We the Leaders) மக்கள் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் இணையப் போவதாகவும், வரவிருக்கும் திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அவர் களம் காண வாய்ப்புள்ளதாகவும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சூழலில், விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஒரு நபர் ஒரு பதவி என்ற விதிமுறைப்படி அவர் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. ஆரம்பத்தில் இந்தத் தொகுதியில் லாரன்ஸ் தவெக சார்பாகப் போட்டியிடுவார் என வதந்திகள் பரவின. ஆனால், அண்ணாமலையின் புதிய இயக்கத்தின் கொள்கையான ‘மாற்றம்’ (Matram) என்ற வார்த்தையை லாரன்ஸும் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், அவர் அண்ணாமலையுடன் கைகோர்க்கவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

தனது அரசியல் பிரவேசம் மற்றும் தேர்தல் போட்டி குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) பக்கத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடப் போவதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது குறித்துத் தொடர்புகொண்டு என்னிடம் விளக்கம் கேட்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். என் தாயாரின் ஆசியுடன், என் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

நீண்டகாலமாகத் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூகச் சேவைகளைச் செய்து வரும் ராகவா லாரன்ஸ், ஆரம்பத்தில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். பின்னர் சினிமாத்துறையில் விஜய் மட்டுமே தனக்கு இருக்கும் ஒரே நல்ல நண்பர் என்று கூறி வந்தார். தற்போது, தமிழகத்தில் விஜய் ஏற்படுத்தியுள்ள அரசியல் உத்வேகம் மற்றும் அண்ணாமலையின் அறம் சார்ந்த புதிய அரசியல் அழைப்பு ஆகியவற்றுக்கு இடையே, லாரன்ஸ் ஜூன் 11 அன்று அறிவிக்கப்போகும் அந்த முக்கிய முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.