புகழ்பெற்ற இதிகாசமான ராமாயணத்தை மையமாக வைத்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட திரைப்படம் உருவாகி வருகிறது. ‘ஆதிபுருஷ்’ படத்திற்குப் பிறகு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்திற்கு ‘ராமாயணா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் நிதேஷ் திவாரி இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
‘ராமாயணா’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 800 கோடி அல்லது ரூ. 1600 கோடி என பல்வேறு செய்திகள் பரவி வந்த நிலையில், தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா படத்தின் உண்மையான பட்ஜெட் குறித்து தற்போது வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அதன்படி, மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 4000 கோடி என்று தயாரிப்பாளர் மல்ஹோத்ரா உறுதிப்படுத்தியுள்ளார். இது இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகவும் அதிக செலவில் உருவாகும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ‘ராமாயணா’ திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு புதிய மைல்கல்லை எட்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.