Posted in

சென்னையில் 3; கன்னியாகுமரியில் ஒன்று: 4 இலவச ஏசி டியூஷன் மையங்களை அறிவித்த நடிகர் தனுஷ்!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், ஏழை எளிய மாணவர்களின் கல்வி வசதிக்காக ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ மூலம் இலவச டியூஷன் மையங்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாகச் சென்னையில் 3 மற்றும் கன்னியாகுமரியில் 1 என மொத்தம் 4 குளிரூட்டப்பட்ட (AC) டியூஷன் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பயிலகங்கள் மூலம் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசக் கல்விப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகத் தொடங்கப்படும் இந்த 4 மையங்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து, வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக நற்பணி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 3 ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுகளை நற்பணி இயக்கமே ஏற்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், திறமையான மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்பட உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக இலவச மாலை நேரப் பயிலகங்களைத் தொடங்கியதைப்போல, தனுஷும் இத்தகைய நலத்திட்டங்களை முன்னெடுப்பது அவரது அரசியல் வருகை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. எனினும், தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகள் தரப்பில் இந்த நற்பணி முற்றிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான சமூக நலச் செயல்பாடே தவிர, அரசியல் அறிவிப்பு அல்ல என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய தலைமுறை வாக்காளர்களைக் கவரும் வகையில் இந்தச் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

தற்போது முதற்கட்ட 4 ஏசி டியூஷன் மையங்களுக்கான கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் நியமனப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அடுத்த கட்டமாக மாவட்டத் தலைநகரங்களிலும், பின்னர் அனைத்துத் தொகுதிகளிலும் இலவசப் பயிலகங்களைத் திறப்பதற்கான களப்பணிகளை தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.