Posted in

மேகதாது விவகாரத்தில் மெளனம் காப்பதா?: முதலமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் முதலமைச்சர் விஜய் வேடிக்கை பார்ப்பதாக இபிஎஸ் சாடியுள்ளார்.

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டதாகவும், இதற்காகத் தமிழகத்தின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அண்மையில் பேட்டியளித்திருந்தார். மேலும் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கத் தமிழகத்திலிருந்து ஒரு குழுவை அனுப்பி வைக்குமாறு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கர்நாடக முதலமைச்சரின் இந்தத் தலைக்கனமான பேச்சுக்கு உடனடி பதில் அளிக்காமல், தமிழக அரசின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறி முதலமைச்சர் விஜய் மெளனம் காத்து வருவதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடகா தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு தனது எதிர்ப்பைப் பதிவு செய்யாமல் வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி கர்நாடகா ஒருதலைப்பட்சமாக அணை கட்ட முனையும் நடவடிக்கைக்கு எதிராகக் கடுமையான சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டித் தகுந்த சட்டரீதியான மற்றும் அரசியல் நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.