இது போரல்ல, உலக நாடுகளின் கழுத்தை நெரிக்கும் ஒரு மாபெரும் ஆட்டம்! அதிபர் ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் தனது ‘விஸ்வரூபத்தை’ காட்டியுள்ளது. உலகிற்கே எண்ணெய் விநியோகிக்கும் இதய நாடியான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ (Strait of Hormuz) ஈரான் அதிரடியாக மூடியுள்ளது. அதுமட்டுமின்றி, இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே கப்பல்கள் செல்ல அனுமதிப்போம் என்ற புதிய நிபந்தனையையும் ஈரான் விதித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எகிறத் தொடங்கியுள்ளதுடன், உலகப் பொருளாதாரம் பெரும் ஆபத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவின் மிக முக்கியமான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் மார்க்கத்தின் மீது ஈரான் ஆதரவு படைகள் ட்ரோன் (Drone) மூலம் பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளன. மேலும், குவைத்தின் எண்ணெய் கிணறுகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்கு வைத்து சுமார் 28 ட்ரோன்கள் ஏவப்பட்ட நிலையில், அவை தடுத்து நிறுத்தப்பட்டதாக குவைத் ராணுவம் அறிவித்துள்ளது. ஜலசந்தி வழியாக அனுமதி இல்லாமல் நுழையும் எந்த ஒரு எண்ணெய் கப்பலையும் சுட்டு வீழ்த்துவோம் என்றும், தப்பிச் செல்ல விரும்பும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் டாலர் வரை ‘டோல் கட்டணம்’ (Toll) செலுத்த வேண்டும் என்றும் ஈரான் மிரட்டி வருவது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
மறுபுறம், அதிபர் ட்ரம்ப் போட்ட போர் நிறுத்த கணக்கு இப்போது அவருக்கே ‘ஆப்பு’ வைத்தது போல மாறியுள்ளது. ஈரானுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை ட்ரம்ப் வாரி வழங்கிவிட்டதாக அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியிலேயே (Republicans) கடும் அதிருப்தி வெடித்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் மூலம் பேசப்பட்ட இந்த சமாதான உடன்படிக்கை அமெரிக்காவின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்கும் என செனட்டர் லிண்ட்சே கிரஹாம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடனடியாக நாடாளுமன்றத்தில் ஆஜராகி, இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகள் என்ன என்பதை விளக்க வேண்டும் என சொந்தக் கட்சியினரே போர்க்கொடி தூக்கியிருப்பது ட்ரம்பிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 10 அம்ச அமைதித் திட்டம் ஈரானுக்கு சாதகமாக இருப்பதை வெள்ளை மாளிகையே ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ட்ரம்ப் ஏதோ ஒரு அவசரத்தில் இந்த முடிவை எடுத்துவிட்டாரோ என்ற சந்தேகம் அவரது ஆதரவாளர்களுக்கே எழுந்துள்ளது. ஈரானோ, ஜலசந்தியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் ஒட்டுமொத்த உலகையுமே மிரட்டி வருகிறது. அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் மோதல் ஒருபுறம், மத்திய கிழக்கில் ஈரான் காட்டும் ‘அக்ரோஷம்’ மறுபுறம் என இன்றைய உலகம் ஒரு எரிமலை மீது அமர்ந்துள்ளது. இந்த ‘யுத்த நிறுத்த நாடகம்’ எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரும் போராக வெடிக்கலாம் என்பதே தற்போதைய நிதர்சனம்!