Posted in

சற்று முன்னர் -இஸ்ரேலின் Hermes 900 ரக நவீன ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது

📅 வெளியானது: April 8, 2026

அதிபர் ட்ரம்ப் அறிவித்த அந்த ‘பெயரளவு’ போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணிநேரங்களிலேயே, ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அல்போர்ஸ் (Alborz) மாகாணங்களில் Air Defenses சரமாரியாகச் செயல்படத் தொடங்கியுள்ளன. வானில் மர்மமான முறையில் பறந்து வந்த ட்ரோன்களை இலக்கு வைத்து ஈரானியப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான IRNA உறுதிப்படுத்தியுள்ளது. மேற்கு தெஹ்ரான் மற்றும் மத்தியப் பகுதிகளில் அடுத்தடுத்து வெடிச்சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), இஸ்ரேலுக்குச் சொந்தமான ‘ஹெர்ம்ஸ் 900’ (Hermes 900) ரக நவீன ட்ரோன் ஒன்றை ஃபார்ஸ் (Fars) மாகாணத்தில் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ, எங்களது வான்பரப்பிற்குள் ஒரு அங்குலம் நுழைந்தாலும் அது போர் நிறுத்தத்தை மீறிய செயலாகவே கருதப்படும்; அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று ஈரான் ராணுவம் செம காட்டமாக எச்சரித்துள்ளது. இந்த ட்ரோன்கள் எங்கிருந்து ஏவப்பட்டன என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

அதே சமயம், அல்போர்ஸ் மாகாணத்தில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியிருப்புப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் ஆத்திரமடைந்துள்ள ஈரான், இஸ்ரேல் மீதும் ஏவுகணை மழையைப் பொழிந்து வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும், அமைதி திரும்புவதற்குப் பதிலாக நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டே போவது உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.