தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung), கடந்த காலங்களில் வடகொரிய எல்லைக்குள் டிரோன்களை (Drones) அனுப்பியதற்கு வருத்தம் தெரிவித்து, இரு நாடுகளுக்கும் இடையே அமைதி திரும்ப விடுத்த வேண்டுகோளை வடகொரியா அதிரடியாக நிராகரித்துள்ளது. தென்கொரியாவின் இந்தச் சமரச முயற்சியை “முட்டாள்தனமானது” மற்றும் “பகல் கனவு” என்று வர்ணித்துள்ள வடகொரிய வெளியுறவுத் துறை, தென்கொரியா எப்போதும் தங்களுக்கு “மிகப்பெரிய எதிரி நாடாகவே” (Most Hostile Enemy State) இருக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த அரசியல் மோதலுக்குப் பதிலடியாக, இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி வடகொரியா தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தென்கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் (JCS) வழங்கிய தகவலின்படி, வடகொரியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியான வோன்சன் (Wonsan) அருகே இருந்து இன்று காலை சுமார் 8:50 மணியளவில் பல குறுகிய தூரப் பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டன. இவை சுமார் 240 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்துக் கடலில் விழுந்தன. அதனைத் தொடர்ந்து, மதியம் 2:20 மணியளவில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த ஏவுகணை ஏவப்பட்டது. இது சுமார் 700 கிலோமீட்டர் தூரம் பயணித்து, சுமார் 60 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து சென்றதாக ஜப்பான் மற்றும் தென்கொரிய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், தென்கொரிய அதிபரின் மன்னிப்பைப் பாராட்டிய சில மணி நேரங்களிலேயே வடகொரிய அதிகாரிகள் இந்த ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளனர். இது தென்கொரியாவிற்கு ஒரு எச்சரிக்கை விடுக்கும் செயலாகும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை மீறித் தாக்கக்கூடிய “மல்டிபிள் நியூக்ளியர் வார்ஹெட்” (Multiple Nuclear Warheads) தொழில்நுட்பத்தைக் கொண்ட திட எரிபொருள் ஏவுகணைகளை வடகொரியா சோதித்து வருவதாகத் தெரிகிறது.
இந்த ஏவுகணை வீச்சைத் தொடர்ந்து, தென்கொரியா தனது தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (NSC) அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகச் சியோல் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளை அமைப்பு (Indo-Pacific Command), இந்த ஏவுகணை வீச்சினால் அமெரிக்காவிற்கோ அல்லது அதன் நட்பு நாடுகளுக்கோ உடனடி ஆபத்து ஏதுமில்லை என்று தெரிவித்துள்ள போதிலும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் இந்தப் பதற்றம் உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளது.