கீவ்/லண்டன்: ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைன் போரில், உக்ரைனியப் படைகளுடன் இணைந்து சண்டையிட்டு வந்த மற்றொரு பிரிட்டன் வீரர் களத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பென் “பட்ஜி” பர்கெஸ் (Ben “Budgie” Burgess) என்ற 33 வயதான இந்தத் தன்னார்வப் போர் வீரரின் இறுதிச் சடங்குகள் நேற்று கீவ் நகரில் உள்ள முக்கிய தகன மையத்தில் நடைபெற்றன. இது உக்ரைன் போரில் மேற்கத்திய தன்னார்வ வீரர்களின் தியாகத்தையும், தொடர்ந்து அதிகரிக்கும் இழப்புகளையும் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
மூன்று ஆண்டுகளாக களத்தில்!
போர்ட்ஸ்மவுத்தைச் (Portsmouth) சேர்ந்த பென் பர்கெஸ், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் போர்முனையில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போராடி வந்தார். அவர் ஒரு திறமையான FPV (First-Person-View) டிரோன் விமானியாக அறியப்பட்டார். உக்ரைனின் விடுதலை மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர், அதற்காகத் தனது உயிரையும் கொடுக்கத் தயங்கவில்லை என்று அவரது சகாக்கள் கூறுகின்றனர்.
தியாகத்தின் அடையாளம்:
நேற்று நடந்த அவரது இறுதிச் சடங்கில் சுமார் 40 பேர் கலந்துகொண்டனர். இதில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக வீரர்கள் அடங்குவர். அவரது சவப்பெட்டி பிரிட்டிஷ் மற்றும் உக்ரைனியக் கொடிகளால் மூடப்பட்டிருந்தது. மேலும், உக்ரைனிய தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. சிலர் அவரது சவப்பெட்டியை அணைத்து அழுதுள்ளனர். சூரியகாந்தி மற்றும் ரோஜா மலர்கள் மெதுவாக அதன் மேல் வைக்கப்பட்டன.
பர்கெஸ் முதலில் ஜாபோரிஜியாவில் (Zaporizhzhia) பீரங்கிப் பிரிவில் பணியாற்றினார், பின்னர் டொனெட்ஸ்கில் (Donetsk) மருத்துவப் போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டார். ஆனால், FPV டிரோன்களை இயக்குவதே அவரது ஆர்வமும் நிபுணத்துவமும் ஆனது. “அவர் எங்களிடம் இருந்த சிறந்த விமானிகளில் ஒருவர்” என்று அவரது தோழர் ஒருவர் Kyiv Post ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். “அவர் உக்ரைனின் சுதந்திரத்தை உண்மையாக நம்பினார். அதற்காகவே போராடினார், அதற்காகவே இறந்தார்.”
உயிரிழப்பின் சோகம்:
பென் பர்கெஸுக்கு குழந்தைகள் இல்லை என்றாலும், ஒடேசாவில் ஒரு காதலி இருந்தார். “நங்கள் எங்கள் படைப்பிரிவில் இருந்த கடைசி இரண்டு வெளிநாட்டுப் போராளிகள்,” என்று அவரது சக வீரர் ஒருவர் கூறியுள்ளார். “அவர் இங்கு எனது குடும்பம். இந்த போரில் பல நண்பர்களை இழந்துள்ளேன் – அவர்தான் எனக்கு மிகப்பெரிய இழப்பு.”
இந்த துயரச் சம்பவம், உக்ரைன் போரின் கொடூரமான யதார்த்தத்தை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறது. சொந்த நாட்டிலிருந்து வெகுதூரம் வந்து, சுதந்திரத்திற்காகப் போராடும் மக்களின் உணர்வுகளுக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் தன்னார்வ வீரர்களின் தியாகம், உலகெங்கிலும் உள்ள மக்களைக் கவர்ந்துள்ளது.