அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான அரசியல் மோதல் வலுத்து வரும் நிலையில், தென் அமெரிக்க நாடான Venezula ல் இருந்து தனது தூதரக அதிகாரிகளின்(Families of diplomats) குடும்பத்தினரை ரஷ்யா அவசரமாக வெளியேற்றி வருகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்க உள்ள சூழலில், வெனிசுலாவில் அமெரிக்கா ராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே, மாஸ்கோ இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஐரோப்பிய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த வெளியேற்றப் பணிகள் ரகசியமாகத் தொடங்கியுள்ளன. வெனிசுலாவின் தற்போதைய சூழல் மிகவும் மோசமாக இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கருதுகின்றனர். இருப்பினும், காரகாஸில் (Caracas) உள்ள தனது தூதரகத்தை ரஷ்யா மூடவில்லை என்றும், அதிகாரிகளின் உறவினர்கள் வெளியேற்றப்படுவது குறித்த அதிகாரப்பூர்வமான பதிலை அளிக்க ரஷ்யா மறுத்துவிட்டதாகவும் ஏபி (Associated Press) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ அழுத்தத்தை மிகத்தீவிரமாக அதிகரித்துள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கக் கடற்படை அந்தப் பகுதியை முற்றுகையிட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் கப்பல்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களையும் நடத்தி வருவது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த மோதலுக்காக, பல தலைமுறைகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ராணுவப் படையை அமெரிக்கா வெனிசுலாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் குவித்துள்ளது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான 'யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு' (USS Gerald R Ford) தலைமையில் இந்தப் படை நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வுகள், வெனிசுலா விவகாரத்தில் ஒரு நேரடி ராணுவ மோதலுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
