உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் பதற்றம் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உத்தியோகபூர்வ இல்லமான 'வால்டாய்' (Valdai) மீது உக்ரைன் ராணுவம் சுமார் 91 காமிகேஸ் ட்ரோன்களைப் (Kamikaze Drones) பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே புளோரிடாவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மறுநாளே நிகழ்ந்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்யா ட்ரம்ப்புக்குத் தகவல் தெரிவித்தபோது, அவர் பெரும் அதிர்ச்சியடைந்ததாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைனின் இந்தச் செயல் அமைதிப் பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும் முயற்சி என ரஷ்யா விமர்சித்துள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாக, போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப் போவதாகவும், இதற்குப் பதிலடியாக உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் அரசு கட்டிடங்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
இருப்பினும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். இது ரஷ்யாவால் திட்டமிட்டு பரப்பப்படும் ஒரு 'பொய்' என்றும், அமெரிக்காவுடனான உக்ரைனின் உறவைச் சிதைக்க ரஷ்யா இத்தகைய நாடகத்தை ஆடுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உக்ரைன் மீது புதிய தாக்குதல்களை நடத்துவதற்கு நியாயமான காரணத்தைத் தேடுவதற்காகவே ரஷ்யா இவ்வாறான ஒரு கதையை உருவாக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் அமைதி ஒப்பந்தம் 95% எட்டப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் கூறிவரும் நிலையில், இத்தகைய தாக்குதல் குற்றச்சாட்டுகள் அந்தப் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. ரஷ்யா தனது வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்திவிட்டதாகக் கூறினாலும், இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
