எகிப்து சிறையில் சுமார் 12 ஆண்டுகள் அரசியல் கைதியாக வாடிய பிரிட்டிஷ்-எகிப்திய மனித உரிமை ஆர்வலர் அலா அப்த் எல்-ஃபத்தா (Alaa Abd el-Fattah), கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26, 2025) லண்டன் வந்தடைந்தார். அவரை விடுவிக்கப் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு பல மாதங்களாகத் தீவிர ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டது. அவர் லண்டன் திரும்பியதை "ஒரு பெரும் வெற்றி" என்று கொண்டாடிய பிரதமர் ஸ்டார்மர், அலா தனது குடும்பத்துடன் இணைந்ததில் தாம் பெருமகிழ்ச்சி அடைவதாகப் பதிவிட்டிருந்தார்.
ஆனால், அலா லண்டன் மண்ணில் காலடி வைத்த சில மணிநேரங்களிலேயே பிரிட்டிஷ் அரசுக்குத் தலைவலி ஆரம்பமானது. 2010 முதல் அலா தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்ட பழைய கருத்துகள் மீண்டும் வைரலாகத் தொடங்கின. அந்தப் பதிவுகளில் அவர் வன்முறையைத் தூண்டும் விதமாகவும், குறிப்பாக காவல்துறையினரையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையும் கொன்று குவிக்க வேண்டும் என்றும் மிகத் தீவிரமான கருத்துகளைப் பகிர்ந்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. "துப்பாக்கி ஏந்திய காவலர்களைக் கொல்வது வீரமானது" போன்ற அவரது பழைய வாசகங்கள் இப்போது லண்டனில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரத்தை உடனடியாகக் கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், பிரதமர் ஸ்டார்மரை மிகக் கடுமையாகச் விமர்சித்து வருகின்றன. "வன்முறையைத் தூண்டும் ஒரு நபரை விடுவிக்கவா இவ்வளவு தூரம் அரசு மெனக்கெட்டது?" என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அலா அப்த் எல்-ஃபத்தாவின் பிரிட்டிஷ் குடியுரிமையை ரத்து செய்து, அவரை மீண்டும் எகிப்துக்கே நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இது பிரதமர் ஸ்டார்மரின் அரசியல் நேர்மைக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தச் சர்ச்சைக்குப் பதிலளித்துள்ள அரசுத் தரப்பு, "எந்தவொரு பிரிட்டிஷ் குடிமகனும் வெளிநாட்டுச் சிறையில் அநீதியாக அடைக்கப்படுவதை மீட்பது அரசின் கடமை, ஆனால் அவரது தனிப்பட்ட வன்முறைக் கருத்துகளை அரசு ஒருபோதும் ஆதரிக்காது" என்று விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், யூத அமைப்புகள் மற்றும் காவல்துறையினர் தரப்பில் அலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்துப் பெரும் அதிருப்தி நிலவுகிறது. மனிதாபிமான அடிப்படையில் தொடங்கப்பட்ட ஒரு மீட்பு நடவடிக்கை, இப்போது பிரிட்டிஷ் அரசுக்கே வினையாக முடிந்துள்ள நிலையில், வரும் நாட்களில் இந்த விவகாரம் மேலும் பல அரசியல் மாற்றங்களுக்குக் காரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
