நேற்றைய தினம் (டிசம்பர் 26) மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID), முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை (டக்கி மாமா) கைது செய்தனர். அவரைப் போலீசார் அழைத்துச் செல்வதைப் பார்த்த சிலர் தகவல் பரப்பவே, யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகமாகத் திகழும் ஸ்ரீதர் திரையரங்கிற்கு முன்னால் ஏராளமான பொதுமக்கள் கூடினர். இவர்கள் அவர் எப்படிக் கைது செய்யப்பட்டார் என்ற விபரங்களைக் கேட்டறிந்தார்களே தவிர, ஐயோ பாவம் என்று எவரும் வருந்தவில்லை.
நிலைமை இவ்வாறு இருக்க, திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று ஸ்ரீதர் திரையரங்கிற்கு முன்னால் வந்து சரவெடி கொளுத்திப் போடவே, அங்கே பெரும் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து அங்கே மேலும் பலர் திரண்டு செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்தனர்.
இந்தக் கைதின் பின்னணியில் பல அரசியல் காரணங்கள் உள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது. புலம்பெயர் தமிழர்கள் நீண்டகாலமாக கருணா, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் ஆகிய மூவரையும் கைது செய்ய வேண்டும் என அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவரும் சுதந்திரமாக உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னால் துணைப்படையாக இராணுவத்துடன் இணைந்து இயங்கிய ஈ.பி.டி.பி (EPDP) அமைப்பின் வசம் இருந்த துப்பாக்கி ஒன்று, 2019-ஆம் ஆண்டு பாதாள உலகக் கும்பல் தலைவன் 'மாகந்துரே மதுஷிடம்' நடத்தப்பட்ட விசாரணையின்போது கண்டறியப்பட்டது. அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
