GO BACK

திமுக, அதிமுக-வை ஓரம் கட்டும் 'தளபதி'.. 2 கோடி ஓட்டு வேட்டை நிஜமா?




திமுக, அதிமுக-வை ஓரம் கட்டும் 'தளபதி'.. 2 கோடி ஓட்டு வேட்டை நிஜமா? அதிர வைக்கும் தவெக-வின் பலப்பரீட்சை!


தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ள தவெக-வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில் ஒரு அதிரடியான புள்ளிவிவரத்தை முன்வைத்தார். தமிழகத்தில் உள்ள 2.25 கோடி ரேஷன் கார்டுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வீட்டிற்கு ஒரு வாக்கு என்று கணக்கிட்டால் கூட விஜய்க்கு 2 கோடி வாக்குகள் உறுதி என அவர் பேசியுள்ளார். திமுக, அதிமுக எனப் பாரம்பரியக் கட்சிகளின் கோட்டைக்குள் தவெக ஊடுருவி விட்டதாக அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 2 கோடி வாக்குகள் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், அசைக்க முடியாத கூட்டணியுடன் களம் கண்ட திமுக பெற்ற மொத்த வாக்குகளே 2.09 கோடி தான். தனித்து அக்கட்சி பெற்றது 1.74 கோடி வாக்குகள் மட்டுமே. அதேபோல் அதிமுக 1.53 கோடி வாக்குகளைப் பெற்றது. தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால அரசியலைத் தீர்மானிக்கும் இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளே இதுவரை எட்டாத 2 கோடி என்ற இலக்கை, முதல் தேர்தலிலேயே விஜய் எட்டுவார் என்று கூறுவது அரசியல் விமர்சகர்களை வியப்பிலும், விமர்சனத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ஆதவ் அர்ஜுனாவின் இந்த 'டேட்டா' கணக்குகள் சமூக வலைதளங்களில் பல விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. ஆரம்பத்தில் தவெக-வுக்கு 23% வாக்குகள் இருப்பதாகக் கூறிய அவர், பின் அதை 26% ஆக உயர்த்தி, இப்போது 2 கோடி வாக்குகள் எனப் பேசி வருகிறார். இதனால் இணையவாசிகளால் அவர் "டேட்டா அர்ஜுனா" என்று கிண்டலாக அழைக்கப்படுகிறார். ஒரு புதிய கட்சி, பூத் கமிட்டி மற்றும் தரைமட்டக் கட்டமைப்பு என அனைத்தையும் பலப்படுத்த வேண்டிய சூழலில், இவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயிப்பது வெறும் கனவா அல்லது ரகசிய வியூகமா என்ற கேள்வி எழுகிறது.

மறுபுறம், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் களப்பணிகளில் காட்டும் தீவிரம், தவெக-விடம் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. இருப்பினும், விஜய்யின் திரை ஆளுமை மற்றும் இளைஞர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு ஒரு பெரிய 'சைலண்ட்' ஓட்டு வங்கியை உருவாக்கும் என அக்கட்சியினர் நம்புகின்றனர். திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கியில் விஜய் கை வைப்பாரா என்பதே இப்போதைய பெரிய எதிர்பார்ப்பு.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த '2 கோடி' மேஜிக் நடக்குமா அல்லது இது தேர்தல் நேரத்து வெற்று முழக்கமாக அமையுமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும். எப்படியிருப்பினும், தேர்தலுக்கு முன்பே திமுக மற்றும் அதிமுக போன்ற ஜாம்பவான்களுக்கு தவெக விடுத்துள்ள இந்த சவால், தமிழக தேர்தல் களத்தை இப்போதே சூடாக்கிவிட்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.