நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'வா வாத்தியார்' திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக, இந்தப் படத்தின் கதைக்களம் அப்படியே ஷங்கர் - விக்ரம் கூட்டணியில் வந்த 'அந்நியன்' படத்தின் சாயலில் இருப்பதாகப் பார்த்த ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான பொதுமக்கள், "திரைக்கதை விறுவிறுப்பாக இல்லை" என்றும் "பழைய கதையை மசாலா கலந்து கொடுத்திருக்கிறார்கள்" என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
படத்தின் மையக்கரு, ஒரு எம்.ஜி.ஆர் ரசிகராக வளர்க்கப்படும் இளைஞன் (கார்த்தி), நிஜ வாழ்க்கையில் ஊழல் நிறைந்த போலிஸ் அதிகாரியாக இருப்பதும், பின்னர் ஒரு கட்டத்தில் நீதிக்காகக் குரல் கொடுக்கும் 'வாத்தியார்' அவதாரம் எடுப்பதும் தான். இது அப்படியே அந்நியன் படத்தின் 'அம்பி - அந்நியன்' மோதலை நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.
படத்தில் கார்த்தியின் நடிப்பு மற்றும் எம்.ஜி.ஆர் மேனரிசம் பாராட்டுகளைப் பெற்றாலும், கதைக்களத்தில் புதுமை இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துள்ளது. "வாத்தியார் சொல்லிக்கொடுத்த பாடம் ரொம்ப பழைய சிலபஸ்" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பொங்கல் ரிலீஸாக மற்ற பெரிய படங்களுடன் மோதும் வேளையில், முதல் நாளே இப்படி ஒரு 'Copycat' முத்திரை விழுந்திருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் நலன் குமாரசாமியின் முந்தைய படங்களான 'சூது கவ்வும்' போன்ற சுவாரஸ்யம் இதில் மிஸ்ஸிங் எனப் பலரும் ஆதங்கப்படுகின்றனர்.
சந்தோஷ் நாராயணனின் இசை சில இடங்களில் எடுபட்டாலும், திரைக்கதையின் தொய்வு காரணமாகப் படம் 70% ரசிகர்களைச் சென்றடையத் தவறிவிட்டதாகவே தற்போதைய கள நிலவரம் தெரிவிக்கிறது. பொங்கல் விடுமுறை நாட்களில் இந்த விமர்சனங்களைத் தாண்டி படம் வசூல் செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
