Ads Top

இந்தியா ஐரோப்பாவோடு போட்ட திட்டம் - அமெரிக்காவிற்கு விழுந்த பெரும் அடி !


இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) இடையே பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட "சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்" (FTA) நேற்று முறைப்படி இறுதி செய்யப்பட்டது. இதற்காக இந்தியா வந்திருந்த ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோருக்கு டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி நேற்று சிறப்பான விருந்து அளித்து கௌரவித்தார். 

குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இவர்களுடன் நேற்று மதியம் நடைபெற்ற உயர்மட்டக் குழு ஆலோசனையின் முடிவில், "அனைத்து ஒப்பந்தங்களின் தாய்" என வர்ணிக்கப்படும் இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் இந்த வருகை வெறும் தூதரகப் பயணம் மட்டுமல்ல, இந்தியா-ஐரோப்பா உறவில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கையும் இந்தப் புதிய ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது. இதன் மூலம் 140 கோடி இந்தியர்களுக்கும், கோடிக்கணக்கான ஐரோப்பிய மக்களுக்கும் புதிய வேலைவாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் உருவாகும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் இதன் மூலம், இந்தியாவின் ஜவுளி, ரத்தினங்கள், நகைகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் எவ்விதத் தடையுமின்றி ஐரோப்பியச் சந்தைகளை மிக எளிதாகச் சென்றடையும். 

குறிப்பாக உற்பத்தித் துறைக்கு இது ஒரு மிகப்பெரிய ஊக்கத்தை அளிப்பதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியச் சந்தை மீதுள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.