அட்லாண்டிக் கடலில் உச்சக்கட்ட பதற்றம்: ரஷ்ய கப்பல்களைச் சூழும் நேட்டோ படைகள்!


அட்லாண்டிக் பெருங்கடலில் ரஷ்யாவின் 'நிழல் கப்பற்படை' (Shadow Fleet) என அழைக்கப்படும் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) படைகள் தீவிரமாக வேட்டையாடி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை 'மெரினேரா' (Marinera) என்ற ரஷ்யக் கொடியுடன் பயணித்த எண்ணெய்க் கப்பலை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைப்பற்றின. கரீபியன் கடலில் இருந்து சுமார் இரண்டு வாரங்களாகத் துரத்தப்பட்ட இந்தக் கப்பல், இறுதியில் ஐஸ்லாந்து மற்றும் ஸ்காட்லாந்துக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து சிறைபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரிட்டிஷ் படைகள் (RAF) வான்வழி கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல்களை வழங்கி பெரும் உதவியாக இருந்தன. 'மெரினேரா' கப்பல் பிடிபட்ட சில நாட்களிலேயே, தற்போது அதே பகுதியில் ரஷ்யாவிற்குச் சொந்தமான மேலும் மூன்று எண்ணெய் கப்பல்களை (Tankers) நேட்டோ படைகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. இந்தக் கப்பல்கள் சர்வதேச தடைகளை மீறி எண்ணெய் கடத்தலில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவை இந்தக் கப்பல்களைச் சுற்றி வளைக்கத் தயாராகி வரும் நிலையில், ரஷ்யா தனது கப்பல்களைப் பாதுகாக்க ஒரு நீர்மூழ்கிக் கப்பலை (Submarine) அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச கடல் எல்லையில் ரஷ்யக் கொடி ஏந்திய கப்பல்களை அமெரிக்கா சிறைபிடிப்பது "கடற்கொள்ளை" போன்றது என ரஷ்யா கடுமையாகச் சாடியுள்ளது. இதனால் அட்லாண்டிக் பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

இந்தக் கப்பல்கள் ஈரான் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளுடன் கள்ளத்தனமாக எண்ணெய் வணிகம் செய்து, அந்தப் பணத்தை உக்ரைன் போருக்கும் பயங்கரவாதத்திற்கும் பயன்படுத்துவதாக நேட்டோ நாடுகள் வாதிடுகின்றன. எஞ்சியுள்ள மூன்று கப்பல்களையும் அமெரிக்கா விரைவில் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுவதால், அமெரிக்கா - ரஷ்யா இடையிலான உறவில் உச்சக்கட்ட விரிசல் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post