அட போங்கடா நீங்களும் உங்கள் விளம்பரமும்: வியட்நாம் அரசு

 


விளம்பர இடைவெளிகளால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கும் வகையில், வியட்நாம் அரசு யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும் இந்த சட்டத் திருத்தத்தின்படி, இனி எவ்விதக் காணொளி விளம்பரங்களையும் முழுமையாகப் பார்க்கும்படி பயனர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. ஐந்து வினாடிகளுக்கு மேல் ஓடும் தவிர்க்க முடியாத (unskippable) விளம்பரங்களுக்கு அந்நாட்டு அரசு முற்றிலுமாகத் தடை விதித்துள்ளது.

சமீபகாலமாக யூடியூப் போன்ற தளங்களில் மிக நீளமான விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாகப் பயனர்கள் உலகெங்கிலும் புகாரளித்து வருகின்றனர். சில சமயங்களில் ஒரு மணிநேரம் வரை நீடிக்கும் விளம்பரங்கள் கூட தவிர்க்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இத்தகைய மன உளைச்சலில் இருந்தும், திரையைப் பார்ப்பதால் ஏற்படும் சோர்விலிருந்தும் (screen fatigue) மக்களைக் காக்க வியட்நாம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

புதிய விதிகளின்படி, காணொளி விளம்பரங்கள் தொடங்கிய 5 வினாடிகளுக்குள் அதைத் தவிர்க்கும் (Skip) வசதி கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். அதேபோல், திரையில் தோன்றும் நிலையான (Static ads) விளம்பரங்களை உடனே நீக்கும் வசதி இருக்க வேண்டும். விளம்பரங்களை மூடுவதற்கான குறியீடுகள் (Close buttons) மிகத் தெளிவாகவும், ஒருமுறை அழுத்தினால் மறையும் வகையிலும் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பயனர்களைக் குழப்பும் வகையில் மறைமுகமாக வைக்கப்படும் விளம்பரக் குறியீடுகளுக்கு இனி அங்கு இடமில்லை.

இந்தச் சட்டத் திருத்தம் விளம்பரதாரர்களுக்கும் சமூக வலைதள நிறுவனங்களுக்கும் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், சட்டவிரோத விளம்பரங்கள் மற்றும் தேவையற்ற விளம்பரத் திணிப்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் தளங்களில் மக்களின் அனுபவம் மேம்படும் என வியட்நாம் அரசு நம்புகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விளம்பரக் கட்டுப்பாட்டில் வியட்நாம் எடுத்துள்ள இந்த முயற்சி மற்ற நாடுகளையும் இது போன்ற சட்டங்களைக் கொண்டுவரத் தூண்டலாம்.

Post a Comment

Previous Post Next Post