
மினியாபோலிஸில் பயங்கரம்: மத்திய முகவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி! ஆளுநர் டிம் வால்ஸ் கடும் கண்டனம்
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம், மினியாபோலிஸில் மத்திய குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை காலையில் தெற்கு மினியாபோலிஸின் நிகோலட் அவென்யூ பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் இதே போன்றதொரு துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு உயிர் பறிபோயிருப்பது அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் (Tim Walz) தனது சமூக வலைதளப் பக்கத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். "மினசோட்டா மக்கள் பொறுமையை இழந்துவிட்டார்கள். மத்திய முகவர்களால் இன்று காலை நடத்தப்பட்ட இந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு குறித்து நான் வெள்ளை மாளிகையிடம் பேசினேன். இது மிகவும் அருவருப்பானது. அதிபர் உடனடியாக இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும். பயிற்சியற்ற, வன்முறை எண்ணம் கொண்ட ஆயிரக்கணக்கான அதிகாரிகளை மினசோட்டாவிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்," என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களுக்கும், மத்திய முகவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க அதிகாரிகள் கண்ணீர் புகை மற்றும் வேதியியல் எரிச்சலூட்டும் பொருட்களைப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர் ஒரு ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதிகாரிகள் தரப்பில் அவர் ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறப்பட்டாலும், அங்கிருந்த மக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அதிகாரிகளின் அத்துமீறலே இந்த மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.
மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே (Jacob Frey) மற்றும் காவல்துறை தலைவர் பிரையன் ஓ'ஹாரா ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். ஏற்கனவே ஜனவரி 7-ஆம் தேதி ரெனீ நிக்கோல் குட் (Renee Nicole Good) என்ற 37 வயது பெண், இதே போன்றதொரு ஐசிசி நடவடிக்கையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்திற்கு நீதி கேட்டு கடந்த சில வாரங்களாகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், மீண்டும் ஒரு மரணம் நிகழ்ந்திருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
மத்திய அரசின் இந்தத் தீவிர குடிவரவு ஒடுக்குமுறை நடவடிக்கைக்கு (Immigration Crackdown) எதிராக மினசோட்டா மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒரு பனிப்போரே நிலவி வருகிறது. மினசோட்டா ஆளுநர் மற்றும் மேயர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தடுப்பதாகக் கூறி மத்திய அரசு விசாரணை நடத்தி வரும் சூழலில், இந்தத் துப்பாக்கிச் சூடு விவகாரம் அமெரிக்க அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Tags
world news