காதலுக்கு தடையாக இருந்த பெற்றோர்: நயமாக பேசி விஷ ஊசி போட்டு கொன்ற நர்ஸ்

காதலுக்கு தடையாக இருந்த பெற்றோர்: நயமாக பேசி விஷ ஊசி போட்டு கொன்ற நர்ஸ் - தெலுங்கானாவில் பயங்கரம்!
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. நர்ஸ் வேலை பார்த்து வந்த 23 வயது இளம்பெண், தனது காதலுக்கு முட்டுக்கட்டையாக இருந்த பெற்றோரையே திட்டமிட்டு படுகொலை செய்துள்ளார். பெற்ற கடனைத் தீர்க்க முடியாமல் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய அந்த பெண்ணின் சதிவலை, போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த பெண் நர்ஸ், சமூக வலைத்தளம் மூலமாக ஒரு வாலிபருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால், காதலன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால், அந்த பெண்ணின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பெற்றோர் சம்மதிக்காததால், தனது காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அவர்களைத் தீர்த்துக்கட்ட அந்த பெண் கொடூரமான முடிவை எடுத்துள்ளார்.
மருத்துவத்துறையில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து, தனது திட்டத்தை மிகவும் கச்சிதமாக செயல்படுத்த அந்த பெண் முயன்றுள்ளார். தான் வேலை செய்யும் மருத்துவமனையிலிருந்து சக்திவாய்ந்த மயக்க மருந்துகள் மற்றும் ஊசிகளை வீட்டிற்கு திருடி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, பெற்றோரிடம் மிகவும் அன்பாகப் பேசிய அவர், அவர்களுக்கு இருக்கும் உடல்வலியைக் குறைக்க ‘பெயின் கில்லர்’ (Pain Killer) ஊசி போடுவதாகக் கூறி நம்ப வைத்துள்ளார். தனது மகளே ஊசி போடுகிறாள் என்ற நம்பிக்கையில் அவர்களும் அதற்கு சம்மதித்துள்ளனர்.
ஆனால், அந்த பெண் மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக (Overdose) உடலில் செலுத்தியுள்ளார். மருந்து வேலை செய்யத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெற்றோர் இருவரும் சுயநினைவை இழந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் இறந்ததை உறுதி செய்த பின், தனது சகோதரருக்கு போன் செய்த அந்த பெண், "பெற்றோர் வாங்கிய விவசாயக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்" என்று கூறி கதறி அழுது நாடகமாடியுள்ளார்.
பெற்றோரின் மரணத்தில் சந்தேகம் அடைந்த சகோதரர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதில், உடலில் விஷத்தன்மை கொண்ட மருந்து செலுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. போலீசாரின் தீவிர விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அந்த பெண், இறுதியில் காதலுக்காக பெற்றோரை ஊசி போட்டு கொன்றதை ஒப்புக்கொண்டார். தற்போது அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
No comments: