சிக்கலில் கிளிண்டன் தம்பதி! எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியம் அளிக்க மறுப்பு - கைதாகும் அபாயம்?
பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் (House Oversight Committee) முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்க, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் அதிரடியாக மறுத்துவிட்டனர்.
விசாரணைக்குழுவின் தலைவரான ஜேம்ஸ் கோமர், கிளிண்டன் தம்பதியினர் ஆஜராகாததைத் தொடர்ந்து அவர்கள் மீது "நாடாளுமன்ற அவமதிப்பு" (Contempt of Congress) நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் இந்த விவகாரத்தை இன்னும் சூடாக்கியுள்ளன. அந்தப் புகைப்படங்களில், பில் கிளிண்டன் ஒரு நீச்சல் குளத்தில் எப்ஸ்டீனின் உதவியாளர் கிஸ்லேன் மேக்ஸ்வெல் மற்றும் அடையாளம் தெரியாத மர்மப் பெண் ஒருவருடன் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், எப்ஸ்டீனின் வீட்டில் பில் கிளிண்டன் பெண் வேடமிட்டிருப்பது போன்ற ஒரு ஓவியம் கண்டெடுக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், எப்ஸ்டீனின் குற்றங்களில் கிளிண்டனுக்குப் பங்கு இருப்பதாக எந்த ஆதாரமும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
கிளிண்டன் தம்பதியினர் வெளியிட்டுள்ள ஒரு பகிரங்கக் கடிதத்தில், தற்போதைய ட்ரம்ப் அரசு நீதியைப் பழிவாங்கும் ஆயுதமாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். "ஒவ்வொரு மனிதனும் எப்போது போராட வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும், எங்களுக்கு இதுதான் அந்த நேரம்" என்று அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே எப்ஸ்டீன் குறித்த தகவல்களைத் தாங்கள் வழங்கிவிட்டதாகவும், மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைப்பது தங்களைத் தனிப்பட்ட முறையில் குறிவைப்பதே என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
தற்போது இந்த விவகாரம் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு இடையிலான நேரடிப் போராக மாறியுள்ளது. ஜேம்ஸ் கோமர் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரவுள்ள அவமதிப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது கிளிண்டன் தம்பதியினருக்குப் பெரும் சட்ட நெருக்கடியை உருவாக்கும்.
