கராத்தே மாஸ்டருடன் காதல்... மருத்துவக் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூர முடிவு!



கராத்தே மாஸ்டருடன் காதல்... மகளை அடித்துக் கொன்ற தந்தை! சேலம் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூர முடிவு!

சேலம் சித்தர் கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி நான்காம் ஆண்டு பயின்று வந்த 22 வயது மாணவி, தனது தந்தையாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மாணவி, சேலத்தில் தனியாக வீடு எடுத்து தங்கிப் படித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கராத்தே கற்கச் சென்ற இடத்தில், 40 வயதான பயிற்சியாளர் சக்திவேல் என்பவருடன் இவருக்குக் காதல் ஏற்பட்டுள்ளது. சக்திவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மாணவி அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் விவகாரம் உறவினர்கள் மூலம் மாணவியின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவர்கள் சேலத்திற்கு விரைந்து வந்து மகளைத் திருத்த முயன்றுள்ளனர். காதலைக் கைவிட்டுத் தங்களுடன் ஊருக்கு வருமாறு அவர்கள் அழைத்தபோது, "நான் சக்திவேலுடன் தான் வாழ்வேன்" என மாணவி பிடிவாதமாக மறுத்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த பெற்றோர் ஊருக்குத் திரும்பினாலும், செல்போன் மூலம் மகளைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால், மாணவி தனது முடிவில் உறுதியாக இருந்ததால் குடும்பத்திற்குள் கடும் பதற்றம் நிலவி வந்தது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காசிக்குச் செல்வதாகத் தனது மனைவியிடம் பொய் கூறி 10,000 ரூபாய் வாங்கிக்கொண்டு மாணவியின் தந்தை மீண்டும் சேலத்திற்கு வந்துள்ளார். அங்கு மகளிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற தந்தை, தனது மகளைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவி மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மகள் இறந்துவிட்டதை உணர்ந்த தந்தை, நடந்தவற்றைத் தனது மனைவிக்குத் தொலைபேசியில் கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் மரணம் குறித்துத் தாய் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள தந்தையைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. உயர்கல்வி பயின்று வந்த மாணவி ஒரு தவறான காதலால் தந்தையாலேயே கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

Previous Post Next Post