இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள மிக முக்கியமான ரயில் நிலையமான டெர்மினி (Termini) அருகே, அந்நாட்டின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த 57 வயது உயர் அதிகாரி ஒருவர் கும்பல் ஒன்றால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், அந்த அதிகாரியின் தலையில் பலமுறை பலமாகத் தாக்கிய கும்பல், அவரைச் சாலையிலேயே ரத்த வெள்ளத்தில் விட்டுவிட்டுத் தப்பிச் சென்றது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல் தொடர்பாக சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், துனிசியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரையும், எகிப்தைச் சேர்ந்த 18 வயது சட்டவிரோதக் குடியேறி ஒருவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் தொடர்புடைய மற்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அமைச்சக அதிகாரி தாக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அதே பகுதியில் 23 வயதுடைய துனிசிய கூரியர் ஊழியர் ஒருவரும் மற்றொரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக 22 மற்றும் 18 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து இத்தாலியப் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரோம் நகரின் குற்றச் செயல்களின் மையப்புள்ளியாக டெர்மினி ரயில் நிலையப் பகுதி மாறியுள்ளதால், இம்மாத தொடக்கத்தில் அப்பகுதி 'சிவப்பு மண்டலமாக' (Red Zone) அறிவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இத்தாலியில் சமீபகாலமாகப் புலம்பெயர்ந்தோர்களால் நடத்தப்படும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ரோம் நகரின் புறநகர்ப் பகுதியில் 18 வயது இளம்பெண் ஒருவரை மூன்று மொராக்கோ நாட்டு நபர்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அரசு அதிகாரி மீதான இந்தத் தாக்குதல், குடியேற்றக் கொள்கைகள் மற்றும் சட்ட ஒழுங்கு குறித்த விவாதத்தை இத்தாலியில் மீண்டும் சூடாக்கியுள்ளது.
https://ceanmedia.com/
