தேர்தல் நடத்தை விதிமுறைகளின் பிடியில் "ஜனநாயகன்" சிக்கியது எப்படி ?

 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால், நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே சென்சார் சான்றிதழ் தொடர்பான சட்டப் போராட்டங்களால் இப்படம் நீண்ட நாட்களாகத் தள்ளிப்போய் வரும் நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய கட்டுப்பாடு தயாரிப்பாளர்களுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இப்படம் ஜனவரி மாதம் வெளியாகவிருந்த நிலையில், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (CBFC) சான்றிதழ் சிக்கலால் வெளியீடு தள்ளிப்போனது. நீதிமன்றங்கள் வரை சென்றும் படத்திற்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் மறுஆய்வுக் குழுவிற்குப் படம் அனுப்பப்பட்டிருந்தாலும், தேர்தல் காலம் நெருங்கிவிட்டதால் சென்சார் பணிகள் மந்தமாகவே உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, அரசியல் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய திரைப்படங்களை தேர்தல் நடைபெறும் காலத்தில் வெளியிடத் தடை விதிக்கப்படலாம் என்பதால், படம் திரைக்கு வருவது தள்ளிப்போகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போதும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பயோபிக் மற்றும் அரசியல் சார்ந்த திரைப்படங்களை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருந்தது. இதே நடைமுறை தற்போது 'ஜனநாயகன்' படத்திற்கும் பொருந்தும் என்று அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அதுவரை இப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி இந்தத் தேர்தலில் நேரடியாகக் களம் காணவிருப்பதால், விஜய்யின் இந்தப் படம் வாக்காளர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கோணத்தில் தேர்தல் ஆணையம் இதைக் கவனமாக அணுகும் என்று தெரிகிறது. இதனால் 'ஜனநாயகன்' திரைப்படத்தை மே 4-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கவே தயாரிப்பாளர்கள் முடிவெடுப்பார்கள் எனக் கருதப்படுகிறது. விஜய் தனது கட்சியின் அரசியல் பணிகளிலும், சிபிஐ விசாரணை போன்ற சட்டச் சிக்கல்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், படத்தின் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Previous Post Next Post

Contact Form