Posted in

நாடு முழுவதும் 324 மருந்து மாதிரிகள் தரமற்றவை என ஆய்வகங்களில் கண்டறிப்பு

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு மருந்து பரிசோதனை ஆய்வகங்கள் நடத்திய சோதனையில், 324 மருந்து மாதிரிகள் தரமற்றவை (NSQ) எனக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை நவம்பர் 25, 2026 புதன்கிழமை அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான கண்காணிப்புப் பரிசோதனையின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதுடன், ஒரு போலி மருந்து மாதிரியும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மத்திய மருந்து பரிசோதனை ஆய்வகங்கள் 37 மாதிரிகளையும், மாநில மருந்து பரிசோதனை ஆய்வகங்கள் 287 மாதிரிகளையும் தரமற்றவை எனப் பட்டியலிட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட மருந்து மாதிரி நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகோல்களில் தோல்வியடையும்போது, அது தரமற்ற மருந்தாக வகைப்படுத்தப்படுகிறது. மேலும், அசாம் மாநில உரிமம் வழங்கும் அதிகாரத்தின் கீழ் பெறப்பட்ட ஒரு மருந்து மாதிரி, வேறொரு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போலி மருந்து என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தெரிவித்துள்ளது.

இந்தத் தரமற்ற வகைப்பாடு பரிசோதிக்கப்பட்ட குறிப்பிட்ட பேட்ச் (Batch) மருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சந்தையில் உள்ள மற்ற பேட்ச் மருந்துகள் அல்லது அதே நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் குறித்துப் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற மற்றும் போலி மருந்துகளைக் கண்டறிந்து சந்தையிலிருந்து அகற்றும் நடவடிக்கை, மாநிலக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அசாமில் கண்டறியப்பட்ட போலி மருந்து விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளதுடன், விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற மற்றும் போலி மருந்துகளின் மாதாந்திரப் பட்டியல்கள் சிடிஎஸ்சிஓ (CDSCO) இணையதளத்தில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.