பள்ளிக்கரணை பாதுகாக்கப்பட்ட ராம்சார் (Ramsar) சதுப்பு நிலப்பகுதியில், பெங்களூருவைச் சேர்ந்த பிரபல பிரிகேட் கட்டுமான நிறுவனம் (Brigade Group) சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டத் திட்டமிட்டிருந்த ‘பிரிகேட் மார்கன் ஹைட்ஸ்’ அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்திற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) அதிரடியாக ரெட் கார்டு கொடுத்துள்ளது. கடந்த முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், சுற்றுச்சூழல் மற்றும் சிஎம்டிஏ (CMDA) விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு மின்னல் வேகத்தில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை (Environmental Clearance) தற்போதைய தவெக அரசு முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூருவில் பல நூறு ஏக்கர் காபி தோட்டங்களின் அதிபரான எம்.ஆர். ஜெய்சங்கரைத் தலைவராகவும், பவித்ரா சங்கர் மற்றும் நிரூபா சங்கர் ஆகியோரை மேலாண் இயக்குநர்களாகவும் கொண்டு செயல்படும் பிரிகேட் நிறுவனம், ரிலையன்ஸ் பாலுவின் மார்கன் நிறுவனத்துடன் இணைந்து சென்னை சோழிங்கநல்லூர்-பெரும்பாக்கம் பகுதியில் 14.7 ஏக்கர் பரப்பளவில் 1,250 சொகுசு வீடுகளைக் கட்ட முடிவு செய்தது. ஆனால், இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அமையவிருந்த இடம் சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட பள்ளிக்குரணை ஈரநிலப் பகுதி என்பதால், இதற்குத் திட்ட அனுமதி வழங்கக் கூடாது என இயற்கை ஆர்வலர்கள் தொடக்கம் முதலே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இத்தனை எதிர்ப்புகளையும் மீறி, கடந்த 2025 ஜனவரி மாதம் அப்போதைய திமுக அரசு இந்த மெகா திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் மற்றும் சிஎம்டிஏ அனுமதிகளை வழங்கியது. இந்தச் சட்டவிரோத அனுமதியை எதிர்த்து ‘அறப்போர் இயக்கம்’ உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தன. விதிகளின்படி மாநில ஈரநில வாரியத்திடமிருந்து (State Wetland Authority) எவ்வித முன்அனுமதியும் பெறாமல் பிரிகேட் நிறுவனம் அசுர வேகத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியதே தற்போது இந்த அடியோடு ரத்தாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. புதிய ஆட்சி அமைந்ததும் இந்த ஊழல் விவகாரம் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, தற்போதைய சுற்றுச்சூழல் துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ரூ.2,000 கோடி பட்ஜெட்டில் கட்டப்படவிருந்த இந்த பிரம்மாண்ட சொகுசு வீட்டுத் திட்டத்திற்கு, அப்போதைய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) அமைச்சராக இருந்த சேகர்பாபு மற்றும் துறை அதிகாரிகள் அப்பட்டமாக விதிகளை மீறி அனுமதி வழங்கியுள்ளனர். “ஒரு மெகா திட்டத்தின் பட்ஜெட்டே 2,000 கோடி ரூபாய் என்றால், பாதுகாக்கப்பட்ட ராம்சார் நிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைய ஆட்சியாளர்களுக்கு எத்தனை கோடி ரூபாய் கமிஷனாக கைமாறியிருக்கும்?” என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தற்போது சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே, தவெக அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை வரவேற்றுள்ள அறப்போர் இயக்கம், சிஎம்டிஏ வழங்கிய கட்டுமானத் திட்ட அனுமதியையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.