உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் வர்த்தக உரிமைகள் மற்றும் பங்குகளைப் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்குப் பல பில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்ய சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) முன்னெடுத்துள்ள திட்டத்திற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து, வெள்ளை மாளிகையின் உலகக் கோப்பை பணிக் குழுவில் பிஃபா பிரதிநிதியாகப் பணியாற்றி வந்த மூத்த ஆலோசகர் கார்லோஸ் கோர்டேரோ (Carlos Cordeiro) தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்கக் கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான கார்லோஸ் கோர்டேரோ, பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் (Gianni Infantino) தீவிர ஆதரவாளராகக் கருதப்பட்டவர். தனது ராஜினாமா குறித்துப் பேசிய அவர், “உலகக் கோப்பையின் பங்குகளை விற்கும் முயற்சியை வேடிக்கை பார்க்க முடியாது; இது கால்பந்து விளையாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய பின்னடைவு. பில்லியன் கணக்கில் நிதி இருப்பு வைத்துள்ள பிஃபாவுக்கு, இதுபோன்ற முதலீடுகளை ஈர்க்க வேண்டிய நிதி நெருக்கடி எதுவுமில்லை” என எச்சரித்துள்ளார்.
பிஃபா தனது உலகக் கோப்பை, மகளிர் உலகக் கோப்பை மற்றும் கிளப் உலகக் கோப்பை ஆகியவற்றின் வர்த்தக உரிமைகளைத் தனியாகப் பிரித்து, $20 பில்லியன் மதிப்பிலான புதிய துணை நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் 20 சதவீத பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயல்வதாகவும், இதற்கு முதன்மை முதலீட்டாளராக முன்னாள் அதிபர் டிரம்பின் மருமகனின் சகோதரரான ஜோஷுவா குஷ்னரின் (Joshua Kushner) நிறுவனம் செயல்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த இரகசிய திட்டத்திற்கு ஐரோப்பியக் கால்பந்து கூட்டமைப்பான யுவேஃபா (UEFA) மற்றும் ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு (AFC) ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலகக் கோப்பைப் போட்டிகளை வணிகமயமாக்கும் இந்த நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் போட்டிகளைப் புறக்கணிக்கப் போவதாகவும் ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன. மூத்த அதிகாரியின் ராஜினாமா மற்றும் கண்டனங்களால் பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் பதவிக்குச் சிக்கல் உருவாகியுள்ளது.