Posted in

மஞ்சள் பத்திரிகையா நீ? – செய்தியாளர் சந்திப்பில் ஆக்ரோஷமான வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை நோக்கி “நீ மஞ்சள் பத்திரிகையா? கேமராவை புடுங்கு…” என்று ஆக்ரோஷமாகப் பேசிய விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக வைகோ அண்மையில் அறிவித்திருந்தார். இந்த அரசியல் மாற்றம் குறித்து செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள், வைகோவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கின.

திமுக கூட்டணியில் இத்தனை காலம் நீடித்து விட்டு, இப்போது அங்கு ஊழல் மலிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம் என்றும், அரசியல் அனுபவமற்ற விஜயை ஆதரிப்பது சரியா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த வைகோ, “மறைமுக நோக்கத்தோடு திட்டமிட்டு வந்து கேள்வி கேட்கிறீர்கள், நீங்கள் விலைபோய்விட்டீர்கள்” என்று சத்தம் போட்டார். மேலும், குறிப்பிட்ட ஒரு தமிழ் நாளிதழின் செய்தியாளரை நோக்கி, “மஞ்சள் பத்திரிகையா நீ?” எனக் காரசாரமாக வினவியதுடன், அவரது கேமராவைப் பறித்து அங்கிருந்து வெளியேற்றுமாறு தனது கட்சியினருக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வைகோவின் ஆதரவாளர்களுக்கும், அங்கிருந்த ஊடகவியலாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் பிரித்து வைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த மோதல் போக்கின் காரணமாக, பாதியிலேயே அந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. மூத்த அரசியல் தலைவரான வைகோவின் முன்னிலையிலேயே பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்ட சம்பவம் ஊடக உலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பத்திரிகையாளர்களை அவமதிக்கும் விதமாகப் பேசிய வைகோவின் இந்தச் செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு ஊடக அமைப்புகள் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகவியலாளர்கள் தங்களின் கடமையைச் செய்யும்போது, அரசியல் தலைவர்கள் தங்களுக்குப் பிடிக்காத கேள்விகளுக்கு நாகரீகமான முறையில் பதிலளிக்க வேண்டுமே தவிர, இது போன்ற அச்சுறுத்தல் பாணியில் இறங்கக் கூடாது எனப் பத்திரிகையாளர் மன்றம் டோஸ் விட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் வைகோ உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.