2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்பாராத தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, கட்சியின் உட்கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறங்கியுள்ளார். தேர்தல் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும், 78 உட்கட்சி மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்ட 38 பேர் கொண்ட திமுக கள ஆய்வு குழு, கடந்த 15 நாட்களாக தீவிரமாக ஆய்வு செய்து தங்களது விரிவான அறிக்கையைத் தலைமையிடம் ஒப்படைத்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்சியில் மிகப்பெரிய நிர்வாக ரீதியான மாற்றங்களைச் செய்ய திமுக தலைமை தற்போது திட்டமிட்டுள்ளது.
கள ஆய்வு குழு சமர்ப்பித்த அறிக்கையில், பல மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தொண்டர்கள் தரப்பில் இருந்து அடுக்கடுக்கான அதிருப்திகளும், கடுமையான புகார்களும் கடிதங்களாக வந்து குவிந்துள்ளதாகத் தெரிகிறது. மாவட்டச் செயலாளர்கள் தொண்டர்களைச் சரியாக மதிப்பதில்லை என்றும், கட்சி நிர்வாகிகளிடையே முறையான ஒத்துழைப்பு இல்லாததே தோல்விக்கு முக்கியக் காரணம் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த திமுக அரசின் சாதனைத் திட்டங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் ஏன் பொதுமக்களைச் சென்றடையவில்லை என்பது குறித்தும் இந்த கள ஆய்வில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகளையும், உட்கட்சிப் பூசல்களையும் சரிசெய்து கட்சியை அடிமட்டம் முதல் வலுப்படுத்துவதற்காக, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் புதிய மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு ஒன்றை மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். இக்குழுவில் கீதா ஜீவன், சக்கரபாணி, எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழரசி, ரவிக்குமார், எம்.எம்.அப்துல்லா, பரந்தாமன், டாக்டர் எழிலன் மற்றும் கே.பி.கருணா ஆகிய முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கள ஆய்வு குழுவின் 78 மாவட்ட அறிக்கைகளையும் முழுமையாகப் படித்து ஆராய்ந்து, புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான பணிகளை இக்குழுவினர் உடனடியாகத் துவங்கவுள்ளனர்.
தங்கம் தென்னரசு தலைமையிலான இந்த உயர்மட்டக் குழு, கட்சியின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் புதிய அணிகளுக்கான நிர்வாகிகளை உருவாக்குவது குறித்த இறுதிப் பரிந்துரைகளை வழங்கும். இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் வைக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்ட பின்னரே, புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் இக்குழு தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு திமுகவில் மிக பிரம்மாண்டமான அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று அரசியல் வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.