மக்களுக்கான நேர்மையான நிர்வாகத்தை வழங்குவோம் என்ற முழக்கத்துடன் தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, பவர் தலைக்கேறிய சில அடிமட்ட நிர்வாகிகளின் சமூக வலைதள பப்ளிசிட்டி மோகம் மற்றும் ‘ரீல்ஸ்’ அலப்பறைகள் தற்பொழுது ஆளுங்கட்சியின் இமேஜுக்கே பெரும் குடைச்சலை ஏற்படுத்தி வருகின்றன. தமிழகம் முழுவதும் கடந்த வார இறுதியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்களைச் சில தவெக நிர்வாகிகள் தங்களது சொந்தக் கட்சி அலுவலகம் போல நினைத்து அத்துமீறல்களில் ஈடுபட்ட சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்பொழுது அக்கட்சியின் தலைமை அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
சென்னை பாலவாக்கத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மாநில அளவிலான போலியோ சொட்டு மருந்து முகாமை முறைப்படி தொடங்கி வைத்த நிலையில், சென்னை பெருங்குடி, துரைப்பாக்கம் மற்றும் தென்காசி மாவட்டம் சுரண்டையிலும் தவெக வட்ட, நகரச் செயலாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் அரசு மருத்துவமனைகளுக்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். எவ்வித மருத்துவப் பயிற்சியோ, அரசுப் பதவியோ அல்லது மக்கள் பிரதிநிதித்துவமோ இல்லாத இந்த நிர்வாகிகள், அங்கிருந்த அரசுப் பதிவேடுகளை ஆய்வு செய்ததோடு மட்டுமின்றி, தங்களது கழுத்தில் கட்சித் துண்டுகளை அணிந்தபடி குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கி, அதனைப் பின்னணி இசையுடன் (BGM) எடிட் செய்து ரீல்ஸ் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் தட்டிவிட்டு விளம்பரம் தேடியுள்ளனர்.
இந்த அத்துமீறல்களின் உச்சகட்டமாக விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு எவ்வித அனுமதியும் இன்றி நுழைந்த தவெக மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல், அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களைக் குற்றவாளிகளைப் போல் விசாரித்து வீடியோ எடுத்துள்ளார். மேலும், மையத்தில் குழந்தைகள் யாரும் இல்லாததால் சிறிது நேரம் காத்திருந்து, ஒரு பெண்ணின் மூலமாகக் குழந்தையை வரவழைத்து, அழுதுகொண்டிருந்த அந்தப் பிஞ்சு குழந்தைக்கு வம்படியாகப் போலியோ சொட்டு மருந்தை ஊற்றி அதனைச் சினிமா பாணியில் ரீல்ஸ் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். மருத்துவப் பயிற்சியற்றவர்கள் இதுபோன்று குழந்தைகளின் உயிரோடு விளையாடுவதை அரசு அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள் எனப் பெற்றோர்கள் கொதித்துப் போயினர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, தவெக தலைமை உடனடியாகக் களத்தில் இறங்கி அதிரடிச் சம்மட்டி அடியைக் கொடுத்துள்ளது. கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி, விருதுநகர் மத்திய ஒன்றியச் செயலாளரான முத்துவேலை அவரது பதவியிலிருந்து 3 மாதக் காலத்திற்குத் தற்காலிகமாக நீக்கம் செய்து விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ செல்வம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு அலுவலகங்களில் எம்.எல்.ஏ நாற்காலிகளில் அமர்ந்து ரீல்ஸ் போடுவது, அரசு மருத்துவமனைகளில் அத்துமீறுவது போன்ற அலப்பறைகளில் ஈடுபடும் மற்ற நிர்வாகிகளுக்கும் இந்த நீக்க நடவடிக்கை ஒரு கடுமையான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.