நர்ஸாகப் பணிபுரிந்த பெண், குளம் ஒன்றில் நின்று போட்டோவுக்குப் போஸ் கொடுக்க, பின்னால் வந்த ராட்சச முதலை அவரது இரண்டு கைகளையும் துண்டாகக் கடித்து நறுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட இரத்தப் பெருக்கு காரணமாக அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். அவரது இரண்டு கைகளையும் காணவில்லை. தெரியாத இடம், நமக்கு பழக்கமே இல்லாத நாடுகளுக்குச் செல்லும்போது எப்பொழுதும் மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது… அங்கே என்ன நடந்தது? விரிவாகப் பார்க்கலாம்!
புளோரிடாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடந்த அந்தப் பயங்கரமான மரண வேட்டை, ஒரு ஹாலிவுட் த்ரில்லர் படத்தின் உச்சக்கட்டக் காட்சியை மிஞ்சும் வகையில் அமைந்திருந்தது. ஆர்லாண்டோவைச் சேர்ந்த 31 வயதான பிரிட்னி கிளார்க் (Brittany Clark), தனது காதலர் சான்ஸ் அலிசன் (Chance Allison) மற்றும் சிறந்த தோழியுடன் ‘லிட்டில் பிக் ஈகான்’ (Little Big Econ) தேசியக் காட்டில் நீண்ட தூரம் மலையேற்றம் (Hiking) சென்றிருந்தார். வெயிலின் தாக்கத்தைத் தணிக்க, அங்கிருந்த ஈகான்லாகாச்சி (Econlockhatchee) ஆற்றின் மூன்று அடி ஆழமுள்ள வெதுவெதுப்பான நீரில் அவர்கள் இறங்கியபோது, தங்களுக்குப் பின்னால் மரணம் பதுங்கியிருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அந்த அமைதியான நதி, சில நொடிகளில் ரத்தக் களரியாக மாறப்போவதை அந்த இளம் காதலர்கள் சொப்பனத்திலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
வழியில் சென்ற ஒருவர், “இங்கே முதலைகள் நடமாட்டம் அதிகம், ஜாக்கிரதையாக இருங்கள்” என்று எச்சரித்த சில நிமிடங்களிலேயே அந்த கோரச் சம்பவம் அரங்கேறியது. ஆற்றின் சேற்றுப் படுக்கையிலிருந்து, யாரும் எதிர்பாராத கணத்தில், சுமார் 13 அடி நீளமுள்ள ஒரு ராட்சச முதலை மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து பிரிட்னியைத் தாக்கியது. முதலையின் தாடைகள் அவளது இரண்டு கைகளையும் மிகக் கொடூரமாகக் கவ்விப் பிடித்தன. தண்ணீருக்குள் அவளை இழுக்க முயன்ற அந்த அரக்கனிடமிருந்து தன் காதலியைக் காப்பாற்ற சான்ஸ் அலிசன் மரணப் போராட்டம் நடத்தினார். முதலையின் வாயிலிருந்து அவளை மீட்கத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர் போராடியும், அந்த நீர்வாழ் கொன்றுண்ணியின் அசுர பலத்திற்கு முன்னால் அவதிப்பட மட்டுமே முடிந்தது.
“நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, மிக மிக மோசமாக உள்ளது!” என்று பதற்றத்தில் அலறியபடி சான்ஸ் 911 அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தபோது, காடே அதிரும் அளவிற்குப் பயங்கரக் கூக்குரல்கள் பின்னணியில் கேட்டன. முதலையின் கொடூரத் தாக்குதலில் பிரிட்னியின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு, இரத்தப் பெருக்குடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் அவளை மீட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அவளது கைகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான காயங்கள் மற்றும் அதீத இரத்த இழப்பு காரணமாக, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பிரிட்னியின் உயிர் பிரிந்தது.
இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, புளோரிடா வனவிலங்குப் பாதுகாப்பு ஆணையம் (FWC) வான்வழி உத்திகளைக் கையாண்டு, அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த 13 அடி மற்றும் 12 அடி நீளமுள்ள இரண்டு பிரம்மாண்ட முதலைகளை வேட்டையாடிக் கொன்றது. பிரிட்னியின் கொடூர மரணம், தெரியாத இடங்களுக்கும், பின்தங்கிய காடுகளுக்கும் செல்லும் பயணிகள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு திகிலூட்டும் எச்சரிக்கையாக மாறியுள்ளது.