Posted in

அதிமுக கூடாரம் காலி! சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 20,000 பேர் தவெக-வில் ஐக்கியம்!

தமிழக அரசியல் வரலாற்றில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிலான மிகப்பெரிய அதிர்ச்சியும், பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அக்கட்சியின் டாப் விக்கெட்டுகளாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களின் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன்  காலை 11 மணியளவில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளனர்.

இந்த மெகா இணைப்பு விழாவிற்காக மாமல்லபுரத்தில் தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்னாள் அமைச்சர்கள் இருவருடன் சேர்த்து அதிமுகவின் 4 மாவட்ட செயலாளர்கள், 7 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், 4 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள், 50-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் என ஒட்டுமொத்த டெல்டா மற்றும் தென்மாவட்ட அதிமுக முக்கியப் புள்ளிகள் தவெக-வில் ஐக்கியமாகின்றனர். இந்த பிரம்மாண்ட நிகழ்வில் பங்கேற்கத் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னை நோக்கி வந்துகொண்டிருப்பதால், அவர்களுக்குத் திண்டுக்கல் பிரியாணி உள்ளிட்ட பிரம்மாண்ட அசைவ விருந்து உபசாரங்களுக்கும் தவெக தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சி. விஜயபாஸ்கர் மற்றும் கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களின் பதவிகளை சபாநாயகரிடம் நேரில் ஒப்படைத்ததைத் தொடர்ந்து, தற்பொழுது தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 47-ல் இருந்து 41 ஆகக் குறைந்துள்ளது. “கட்சிக்காக உழைப்பவர்களின் வார்த்தைகளுக்கு அதிமுக தலைமை மதிப்பளிப்பதில்லை; சுயநலப் போக்கால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ள சி. விஜயபாஸ்கர், தற்பொழுது முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். இவர்களோடு திருச்சி வளர்மதி, திருப்பூர் எம்.எஸ்.எம் ஆனந்தன் போன்ற மூத்த தலைகளும் தவெக-விற்குத் தாவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாக மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக செயலாளர்கள் தவெக-வை நோக்கி நகர்வது அதிமுகவின் ஒட்டுமொத்த ஓட்டு வங்கியையே காலி செய்யும் அதிரடித் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. இந்த அசுர வேக கட்சி சேர்க்கை மூலம் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்துத் தனது அரசியல் பலத்தை மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *