அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளின் அதிமுக்கிய ராணுவ நடவடிக்கையான ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) வான்வழித் தாக்குதலில் ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (86) கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இத்தாக்குதல் நடந்து நான்கு மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், கமேனியின் உடல் இதுவரை அடக்கம் செய்யப்படாமல் ரகசியமாகக் குளிரூட்டப்பட்ட அறையில் (Cold Storage) பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவல் தற்பொழுது சர்வதேச அளவில் வெளியாகியுள்ளது. ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவராக அவரது மகன் மொஜ்தபா கமேனி பொறுப்பேற்றுள்ள சூழலில், மறைந்த தலைவருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிச்சடங்கு ஊர்வலங்களை ஜூலை 4 முதல் ஜூலை 9 வரை நடத்த ஈரான் அரசு தற்பொழுது தீவிரமாகத் தயாராகி வருகிறது.
இஸ்லாமிய பாரம்பரிய முறைப்படி ஒருவர் மரணமடைந்தால் அவரது உடலை எம்பாமிங் (Embalming) போன்ற இரசாயனப் பூச்சுகள் இல்லாமல் உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்பது விதியாகும். ஆனால், போர்ச் சூழல், வான்வழித் தாக்குதலில் கமேனியின் உடல் அடைந்த கடுமையான சேதங்கள் மற்றும் அடுத்தடுத்து ஈரான் தலைமை எதிர்கொண்ட அசாதாரண பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அவரது இறுதிச்சடங்கு நான்கு மாதங்கள் தள்ளிப்போனது. இதுகுறித்து சர்வதேசப் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகையில், ஷியா இஸ்லாமிய சட்டத்தின்படி விதிவிலக்கான அவசர காலங்களில் உடலை ரசாயனம் தடவாமல், வெறும் குளிரூட்டப்பட்ட உறைவிப்பான்களில் (Refrigeration) பல மாதங்கள் பாதுகாப்பாக வைக்க மத ரீதியான அனுமதியைப் பெற முடியும் என்றும், அதன் அடிப்படையிலேயே கமேனியின் உடல் சிதைந்துவிடாமல் இத்தனை நாட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கியுள்ளனர்.
இந்த நீண்ட தாமதத்திற்குப் பிறகு, ஜூலை 4 ஆம் தேதி தெஹ்ரானின் புகழ்பெற்ற கிராண்ட் மொசல்லா (Grand Mosalla) தொழுகை வளாகத்தில் கமேனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மூன்று நாட்கள் வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர், ஈரானின் அரசியல் மையமான தெஹ்ரானில் பிரம்மாண்ட இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டு, அங்கிருந்து ஷியா பிரிவினரின் புனித நகரங்களான ஈராக்கின் நஜாஃப் (Najaf) மற்றும் கர்பலா (Karbala) ஆகிய இடங்களுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு ரகசிய வழிபாடுகள் நடத்தப்படவுள்ளன. இறுதியாக, கமேனியின் பிறந்த இடமான ஈரானின் மஷாத் (Mashhad) நகரில் உள்ள இமாம் ரெசா புனித தர்கா வளாகத்தில் ஜூலை 9 ஆம் தேதி அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.
முன்னதாக 1989 இல் ஈரானின் ஸ்தாபகர் அயதுல்லா கொமேனி மற்றும் 2020 இல் காசிம் சுலைமானி ஆகியோரின் இறுதிச்சடங்கின் போது லட்சக்கணக்கான மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி, உடலைத் தொட முயன்றதால் பெரும் கலவரமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுபோன்றதொரு பேரழிவு மற்றும் பாதுகாப்பு குளறுபடிகள் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தற்பொழுது மிகத் தீவிரமாக உள்ளது. மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வரும் இந்த வேளையில், இரு நாடுகளின் எல்லைகளைக் கடந்து கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்கவிருக்கும் இந்த மெகா இறுதிச்சடங்கு ஊர்வலம், ஈரானின் வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான மற்றும் கடுமையான பாதுகாப்பு வளையத்தைக் கொண்ட ஒரு நிகழ்வாக மாற்றப்பட்டுள்ளது.