தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து பொதுமேடையில் ஒருமையிலும், அவதூறாகவும் பேசிய வழக்கில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அரசுப் பணிகள் மற்றும் உள்ளூர் ஆய்வில் அனிதா ராதாகிருஷ்ணன் ஈடுபட்டிருந்த போது, அங்கு விரைந்த ஆத்தூர் உள்கோட்ட காவல் அதிகாரிகள் அவரை முறைப்படி கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
கடந்த ஜூன் 20-ஆம் தேதி தூத்துக்குடி ஆத்தூர் பகுதியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்தப் பேச்சின் போது, சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் அமைதியாக அமர்ந்திருந்த விவாதச் சூழலைத் தவாறாக விமர்சித்ததோடு, அவரது திரைத்துறைப் பின்னணி குறித்தும் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை ஒருமையில் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தவெக (TVK) ஆத்தூர் நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் இரு தரப்பினரிடையே மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது நடவடிக்கையைத் தவிர்க்க அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்த மனு, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், “மனுதாரர் சாதாரண நபர் அல்ல, 7 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தவர்; அவர் பொதுவெளியில் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் பொறுப்புடனும் பேசியிருக்க வேண்டும்” என்று கூறி முன்ஜாமீனுக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாட்டில் 1967 முதல் திரைத்துறையைச் சார்ந்தவர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வருவதைச் சுட்டிக்காட்டி, ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு இப்படிப் பொறுப்பற்ற முறையில் முதலமைச்சரை விமர்சிக்கலாமா எனக் கேள்வி எழுப்பி, முன்ஜாமீன் மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்தார்.
நீதிமன்ற உத்தரவு வெளியான அடுத்த 90 நிமிடங்களுக்குள் காவல்துறையினர் இந்த அதிரடிக் கைதை நிகழ்த்தியுள்ளனர். தவெக அரசுப் பொறுப்பேற்ற பிறகு திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வரும் நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த கைது நடவடிக்கை திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்திற்குள் தவெக – திமுக இடையே ஏற்கனவே காரசாரமான அரசியல் மோதல்கள் நீடித்து வரும் சூழலில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் இந்த அதிரடிக் கைது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய பரபரப்பையும், இரு கட்சித் தொண்டர்களிடையே பெரும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.