தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் தீவிர விசாரணைக்கு வந்துள்ள சூழலில், அரசியல் மற்றும் நீதிமன்ற வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதுவையில் உள்ள தனது சொந்தச் சகோதரர் மரிய கிளோத் வீட்டிற்குள் புகுந்து, அவரையும் அவரது மனைவியையும் கட்டையால் கொடூரமாகத் தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், பட்ஜெட் தயாரிப்புப் பணிகளைக் காரணம் காட்டி அமைச்சர் இன்றும் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, வரும் ஜூலை 10-ஆம் தேதி அவர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சரின் சொந்தச் சகோதரர் மரிய கிளோத், தங்களுக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் குறித்துப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். “கடந்த 2022-ல் நடத்தப்பட்ட அந்தக் கொலைவெறித் தாக்குதலுக்குப் பிறகு, உயிருக்கு பயந்து நாங்கள் எங்கு வசிக்கிறோம் என்பதே யாருக்கும் தெரியாத அளவிற்கு மறைந்து வாழ்ந்து வந்தோம்; தமிழகத்தின் சில பகுதிகளிலும், பின்னர் வெளிநாட்டிலும் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்பொழுது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வேகம் எடுத்துள்ள நிலையில், வழக்கை எப்படியாவது வாபஸ் பெற வைக்க வேண்டும் என்று அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் இருந்து எங்களுக்குத் தொடர்ந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து மேலும் பேசிய மரிய கிளோத், “அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட இந்த மோதலுக்கு ஒரு டிரஸ்ட் (Trust) சொத்து நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகள்தான் (Mismanagement) முதன்மைக் காரணம். இந்த முறைகேடுகளுக்கு எதிராக நான் நீதிமன்றத்தை நாடித் தடை உத்தரவு பெற்றேன். அந்த ஆத்திரத்தில்தான் என் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பிறகும் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மூலமாகக் கட்டப்பஞ்சாயத்து செய்து எங்களை மிரட்டி வருகிறார்கள். எங்கள் மீதும் என் மனைவி மீதும் பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. பாண்டிச்சேரியில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தித் தங்களுக்குக் கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வந்தாலும், இந்த வழக்கில் இருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை என்று மரிய கிளோத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தங்களுக்கு நேர்ந்துள்ள இவ்வளவு துயரங்களுக்கும் மத்தியிலும் சட்டப்போராட்டத்தைத் தொடர்வதற்குக் காரணம் இந்திய நீதித்துறையின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும்தான் என்றும், தங்களுக்குச் சாதகமாக நிச்சயம் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். தமிழகத்தில் புதிய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள வேளையில், நிதியமைச்சரின் குடும்பப் பிரச்சினை நீதிமன்றப் படியேறி இருப்பது தவெக அரசுக்கும் புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.