Posted in

அரசகுமார் விவகாரத்தில் புதிய திருப்பம்: 60 வயதில் 21 வயது பெண்ணுடன் திருமணம் என பரபரப்பு புகார்!

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்குத் தரமுயர்த்துதல், முறையான அரசு அங்கீகாரம் மற்றும் தடையில்லாச் சான்றிதழ்களைப் (NOC) பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த புகாரில், ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வந்த பி.டி. அரசகுமார் (59) சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி மூன்று நாட்கள் போலீஸ் காவலில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அரசகுமாருக்கு எதிராகத் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஐசக் பாண்டியன் என்பவர் தற்பொழுது அளித்துள்ள கூடுதல் புகார், இந்த விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகார்தாரரான ஐசக் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, கடந்த 2006-ஆம் ஆண்டு தனது மகளின் மருத்துவப் படிப்புச் செலவிற்காக அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, தன்னிடம் வெள்ளை ஆடையில் ஆடம்பரமாக வந்து பழகிய அரசகுமார், தனது மனைவியின் நகைகளை அடகு வைக்கச் சொல்லி 15 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாகத் தெரிவித்துள்ளார். பல வருடங்களாகியும் பணத்தைத் தராமல் இழுத்தடித்ததுடன், விராலிமலையில் உள்ள தனது பி.பி.கே பி.எட் கல்லூரிக்கு வரவழைத்துத் தனது தம்பி ரவிச்சந்திரன் மற்றும் அடியாட்களை வைத்துக் கத்தியால் குத்த முயன்று அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நீதிமன்றம் மூலம் அழுத்தம் கொடுத்தபோது, 2026 சட்டமன்றத் தேர்தல் பஞ்சாயத்து பேசி முதற்கட்டமாக 7 லட்சம் மட்டும் கொடுத்துத் தன்னை மிரட்டி வழக்கை வாபஸ் பெற வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது ஒரே மகளைக் கடத்திக் கொலை செய்துவிடுவேன் என அரசகுமார் மிரட்டியதால், பயந்துபோய் சென்னையை விட்டே காலி செய்துவிட்டுத் தனது சொந்த ஊருக்குச் சென்றதாக ஐசக் பாண்டியன் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இது குறித்துப் புகார் அளிக்க முயன்றபோது, அப்போதைய ஆளும்கட்சியான திமுக-வின் முக்கியத் தலைவர்களுடன் அரசகுமார் நெருக்கமாக இருந்ததால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். “முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி போன்றோரிடம் முறையிட்டபோது, அவர் மிகவும் பெரிய இடத்தில் இருக்கிறார், அவர் மீது புகார் அளித்தால் யார் நடவடிக்கை எடுப்பார்கள், எனவே பெரிய இடங்களுடன் மோதாதே என எங்களை எச்சரித்துத் திருப்பி அனுப்பினார்கள்” என்றும் ஐசக் பாண்டியன் தனது பேட்டியில் அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக்கொண்டு பல கோடி ரூபாய் சுருட்டியுள்ள அரசகுமாருக்குப் பல்வேறு கொலை வழக்குகளிலும் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ள புகார்தாரர், “ஜோசியர் கூறிய அறிவுரையின்படி அரசியலில் மிகப்பெரிய யோகமும் பதவியும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 60 வயதை நெருங்கும் அரசகுமார் தனது மகள் வயதான 21 வயது பெண்ணை இரண்டாவதாகத் ரகசியத் திருமணம் செய்துள்ளார்” என்ற தனிப்பட்ட திடுக்கிடும் தகவலையும் பகிர்ந்துள்ளார். அரசகுமாரின் வீட்டின் அருகே செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ‘நியூஸ் தமிழ்’ ஊடகக் குழுவினரை அவரது ஆதரவாளர்கள் ஒருமையில் பேசி, நாக்கைத் துருத்தி மிரட்டியுள்ள காட்சிகளும் தற்பொழுது ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், இந்த விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தங்களின் விசாரணையை மேலும் முடுக்கிவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *