Posted in

இனி தாலுகா ஆபீஸ் போக வேண்டாம்! 15 நாளில் தானியங்கி பட்டா மாறுதல்: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நிலம் வாங்குபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களின் நீண்ட நாள் சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கான தானியங்கி பட்டா மாறுதல் (Auto-mutation) நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சீர்திருத்தங்கள் மென்பொருளில் (Software) திருத்தப்பட்டு, அடுத்த 15 நாட்களுக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் பொதுமக்கள் சொத்துகளைப் பதிவு செய்த பிறகு, பட்டா மாறுதலுக்காக சார்பதிவாளர் அலுவலகத்திற்கோ அல்லது வட்டாட்சியர் (Taluk) அலுவலகத்திற்கோ நேரில் செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது.

தற்போது அமலில் உள்ள ஆன்லைன் பட்டா மாறுதல் முறையில், விற்பனையாளரின் பெயர், புல எண் மற்றும் பரப்பளவு போன்றவை இணையதளத்தில் உள்ள விவரங்களுடன் நூறு சதவீதம் சரியாக இருந்தால் மட்டுமே தானியங்கி முறையில் பட்டா மாறியது. இதில் சிறிய அளவிலான எழுத்துப் பிழைகள் அல்லது தரவுப் பொருத்தமின்மை இருந்தாலும் விண்ணப்பங்கள் முடங்கி வந்தன. இந்த இடர்ப்பாடுகளை உடனடியாகக் களைந்து, பொதுமக்களுக்கு தடையற்ற சேவையை வழங்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில், கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சரிசெய்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் திருத்தப்பட்ட புதிய அரசாணை (நிலை எண். 526, நாள்: 25.06.2026) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி, நிலத்தை விற்பனை செய்யும்போது நில உரிமையாளர் (பட்டாதார்) மட்டுமின்றி, அவரது குடும்ப உறுப்பினர்களான மனைவி மற்றும் பிள்ளைகள் இணைந்து கூட்டுப் பதிவாகக் கையொப்பமிடும் நிகழ்வுகளிலும் இனி தானியங்கி பட்டா மாறுதல் தடையின்றி வேலை செய்யும். மேலும், நில உரிமையாளர் நேரடியாக வராமல் பொது அதிகார முகவர் (Power of Attorney) மூலமாக நிலத்தை விற்பனை செய்யும்போதும், பட்டாதாரர் பெயரும் விற்பனை செய்பவர் பெயரும் மாறுபட்டாலும், அது செல்லத்தக்க ‘பவர் ஆஃப் அட்டர்னி’ ஆவணம் என்பதால் கணினியே அதனை ஏற்றுக்கொண்டு தானியங்கி முறையில் பட்டா மாற்றம் செய்துவிடும்.

இவற்றுடன் கூடுதலாக, நிலத்தை வாங்குபவருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏற்கனவே சொந்தமாக நிலம் இருந்து, பழைய பட்டா எண் இருந்தாலும் அல்லது புதியவராக இருந்தாலும், கால விரயத்தைத் தவிர்க்கும் பொருட்டு அந்த கிராமத்தின் கடைசி பட்டா எண்ணுக்கு அடுத்த புதிய எண் (Last to next number) மென்பொருள் மூலமாக தானாகவே ஒதுக்கப்படும். இந்த புதிய மென்பொருள் திருத்தங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதால், சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவாகும் உட்பிரிவு அல்லாத பெருவாரியான சொத்துகளுக்கு உடனுக்குடன் பட்டாக்கள் மாறிவிடும் என்றும், விண்ணப்பங்கள் மீது 15 நாட்களுக்குள் இறுதித் தீர்வு எட்டப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *