தமிழகத்தில் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக எழுந்த புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூப் சேனல் உரிமையாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட சிலர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசிய ஆடியோ அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரில் 5 பேரை கைது செய்த சென்னை திருவல்லிக்கேணி போலீசார் நடத்திய விசாரணையில், இந்த ஒட்டுமொத்த சதித் திட்டத்திற்கும் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக் குமாரும் மாஸ்டர்மைண்டாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது.
இந்த வழக்கில் ஆட்சியை கவிழ்க்க மொத்தம் 40 கோடி ரூபாய் வரை சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் தற்போது தலைமறைவாகியுள்ளனர். இவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் சென்னை காவல்துறை திடீரென ‘லுக் அவுட்’ (Lookout) நோட்டீஸ் பிறப்பித்து எல்லையோர சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கரூரில் அதிமுகவில் இருந்து விலகி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள எம்.ஆர். விஜயபாஸ்கரால் அங்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த மாத இறுதியில் தமிழக முதல்வர் விஜய் கரூருக்கு நேரடிப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். முதல்வர் விஜய்யின் இந்த முக்கிய கரூர் பயணத்திற்கும், வரவிருக்கும் கரூர் இடைத்தேர்தலுக்கும் முன்பாகவே, சதி வழக்கில் தொடர்புடைய செந்தில் பாலாஜியை கைது செய்ய அரசு தரப்பில் தீவிரமாக காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தலைமறைவாக உள்ள இருவரையும் தேடும் பணியின் ஒரு பகுதியாக, நேற்று கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்குச் சென்ற திருவல்லிக்கேணி போலீசார், அவரது பெற்றோரிடம் சம்மன் வழங்கியுள்ளனர். உடனடியாக சென்னை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் சட்டரீதியான கடுமையான கைது நடவடிக்கைகள் பாயும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவால் காவல்துறை இந்த வழக்கில் காட்டி வரும் வேகம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.