தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசு நிர்வாகத்தில் “நிழல் அதிகார மையங்கள்” உருவெடுத்துள்ளதாக எதிர்க்கட்சியான அதிமுக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளது. “எனது ஆட்சியில் என்னைத் தவிர வேறு அதிகார மையங்கள் இருக்காது” என்று முதலமைச்சர் விஜய் பதவியேற்பின் போது அறிவித்திருந்த நிலையில், தற்போது கோட்டை வட்டாரத்தில் மூன்று முக்கிய நபர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாக அதிமுகவின் மூத்த தலைவர் ஆர்.பி. உதயகுமார் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய தவெக ஆட்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் முக்கிய முடிவுகளில் முதலமைச்சரின் ஆலோசகர்களாகக் கருதப்படும் சிலரின் தலையீடு அதிகமாக இருப்பதாகக் குற்றம்சாட்டினார். குறிப்பாக, உளவுத்துறை (Intel Reports) அளிக்கும் ரகசிய அறிக்கைகளை முதலமைச்சர் விஜய் நேரடியாகப் படிக்கிறாரா அல்லது அவருக்குப் பின்னால் இருக்கும் நிழல் அதிகார மையங்கள் படிக்கிறார்களா? என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, அதிகாரப்பூர்வமாக அரசாணை (GO) வெளியிடப்படாமல் சில நபர்கள் திரைமறைவிலிருந்து கொண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாகக் கூறப்படுகிறது. தவெகவின் தேர்தல் உத்தி வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் முதலமைச்சரின் நெருங்கிய நண்பரான தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு கோட்டை வட்டாரங்களில் அதிருப்தி நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிர்வாகக் குழப்பங்கள் நீடித்தால், அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் முரண்பாடுகள் வெடிக்கும் என அதிமுக எச்சரித்துள்ளது.
அரசுக்குச் சம்பந்தமில்லாத நபர்கள் கோட்டையின் அதிகாரத் காரிடார்களுக்குள் ஆதிக்கம் செலுத்துவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அழகல்ல என்று ஆர்.பி. உதயகுமார் சாடியுள்ளார். கடந்த காலங்களில் இதே போன்ற நிழல் அதிகார மையங்களால் பல ஆட்சிகள் சரிவைச் சந்தித்த பிளாஷ்பேக்குகளைச் சுட்டிக்காட்டிய அவர், முதல்வர் விஜய் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, உளவுத்துறை மற்றும் கொள்கை முடிவுகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் நேரடியாக வைத்திருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் நிர்வாகச் சீர்குலைவு ஏற்படும் என்றும் தனது வார்னிங்கில் தெரிவித்துள்ளார்.