தமிழ்நாடு டாஸ்மாக் (TASMAC) கடைகளில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் ‘பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும்’ முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 7) செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கே. விக்னேஷ் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஊதிய உயர்வு மற்றும் இ.எஸ்.ஐ (ESI) மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் டாஸ்மாக் பணியாளர்களின் 20 ஆண்டுகால நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின் போது தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜய் முன்வைத்த மிக முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று இந்த ‘பாட்டிலுக்கு ரூபாய் பத்து’ ஊழல் ஆகும். தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் இந்த அவப்பெயர் தொடர்வதாகப் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அரசு தரப்பில் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதற்குப் பதிலளித்த டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள், தங்களுக்கு வெறும் ₹11,000 மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்படுவதால் ஏற்படும் வாழ்வாதாரப் நெருக்கடியே இதற்குக் காரணம் என வாதிட்டனர். ஊழியர்களின் இந்த நியாயமான பொருளாதாரப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, இந்த 25% சம்பள உயர்வை வழங்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பின்படி, இந்த புதிய ஊதிய உயர்வு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. இதன் மூலம் உதவி விற்பனையாளர்களுக்கு ₹14,340-லிருந்து ₹17,925 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ₹15,530-லிருந்து ₹19,413 ஆகவும், மேற்பார்வையாளர்களுக்கு (Supervisors) ₹17,850-லிருந்து ₹22,313 ஆகவும் ஊதியம் கணிசமாக உயரவுள்ளது. இந்த அதிரடி ஊதிய உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ₹110.74 கோடி நிதிச் சுமை ஏற்படும் என்ற போதிலும், இதனால் நுகர்வோருக்கு எவ்வித கூடுதல் சுமையோ அல்லது மதுபானங்களின் விலை உயர்வோ இருக்காது என்று அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதே வேளையில், ஊழியர்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் அமைச்சர் விடுத்துள்ளார். “டாஸ்மாக் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இப்போது 25% ஊதிய உயர்வு மற்றும் இ.எஸ்.ஐ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதால், இனிமேலும் ஊழியர்கள் ‘பத்து ரூபாய்’ காரணத்தைக் கூறிக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அரசு சகித்துக் கொள்ளாது. இனிவரும் நாட்களில் அரசு நிர்ணயித்த எம்.ஆர்.பி (MRP) விலையை விட ஒரு ரூபாய் கூடுதலாக விற்றாலும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் எவ்வித தாரணமும் இன்றி உடனடியாக நிரந்தரப் பணிநீக்கம் (Dismiss) செய்யப்படுவார்கள்” என்று அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளது குடிமகன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.