பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த அமெரிக்கப் கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீனின் (Jeffrey Epstein) ‘லிட்டில் செயின்ட் ஜேம்ஸ்’ (Little St. James) என்ற தனிநபர் தீவின் உள்பகுதிகள் அடங்கிய, இதுவரை யாரும் பார்த்திராத அதிர்ச்சி வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ‘ஹவுஸ் ஓவர்சைட் கமிட்டி’ (House Oversight Committee) ஜனநாயகக் கட்சியினரால் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த ஆதாரங்கள், எப்ஸ்டீன் உலகத் தலைவர்கள் மற்றும் பெரும் புள்ளிகளை வரவழைத்து நிகழ்த்திய கொடூரமான பாலியல் அத்துமீறல்களின் மர்மங்களை உலகிற்கு அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளன.
சுமார் 150-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிரத்யேக வீடியோக்கள் அடங்கிய இந்தத் தொகுப்பில், அந்தப் ஆடம்பர பங்களாவின் உள்ளே இருக்கும் மர்ம அறைகள் ஒவ்வொன்றும் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, ஒரு விசித்திரமான அறையில் மஞ்சள் நிறத்திலான ‘பல் மருத்துவ நாற்காலி’ (Dentist’s chair) ஒன்றும், அதன் அருகிலுள்ள சுவர்களில் ஆண்களின் முக வடிவங்களைக் கொண்ட விசித்திரமான முகமூடிகள் (Masks) தொங்கவிடப்பட்டிருப்பதும் கேமராவில் பதிவாகியுள்ளது. மருத்துவமனை அல்லாத ஒரு சொகுசு பங்களாவில் இத்தகைய மருத்துவ நாற்காலி ஏன் வைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம், அங்கு பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் எந்த அளவிற்குத் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருப்பார்கள் என்பதை உணர்த்துவதாக விசாரணைக் குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், அங்குள்ள ஒரு நூலக அறையின் கரும்பலகையில் (Blackboard) “அதிகாரம்” (Power), “ஏமாற்று வேலை” (Deception), “அரசியல்” (Political), “உண்மை” (Truth), மற்றும் “சதித் திட்டங்கள்” (Plots) போன்ற வார்த்தைகள் எப்ஸ்டீனால் எழுதப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், அங்கிருந்த ஒரு லேண்ட்லைன் தொலைபேசியில் மிக முக்கியமான நபர்களின் பெயர்கள் ‘ஸ்பீடு டயல்’ (Speed Dial) பொத்தான்களில் ஒட்டப்பட்டிருந்ததும், அதில் சில முக்கியப் பெண்களின் பெயர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்பொழுது மறைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சொகுசு மாளிகையின் படுக்கையறைகள், குளியலறைகள் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் ஒரு சொகுசு ரிசார்ட் போல காட்சியளித்தாலும், அதன் பின்னால் மறைந்துள்ள கொடூரங்கள் பார்ப்போரை உலுக்கியுள்ளன.
இந்த வீடியோக்கள் அனைத்தும் கடந்த 2020 ஆம் ஆண்டு விசாரணை அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டவை என்பதும், எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து இரகசியக் கோப்புகளையும் முழுமையாக வெளியிடக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் அழுத்தம் அதிகரித்து வரும் வேளையில் இவை பொதுவெளியில் கசிந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. “இந்த அறைகளுக்குள் என்ன மாதிரியான கொடூரங்கள் அரங்கேறின என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது” என்று இந்த விசாரணைக் குழுவின் முக்கிய உறுப்பினர் ராபர்ட் கார்சியா தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி வீடியோக்கள் தற்பொழுது உலகளாவிய அளவில் இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி வருகின்றன.